எதிர்க்கட்சி பிரிவினையால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இழப்புதான்.. சந்திரசேகர் ஆசாத்
உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சி பிரிவினையால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இழப்புதான் என்று ஆசாத் சமாஜ் கட்சி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தெரிவித்தார்.
ஆசாத் சமாஜ் கட்சி தலைவர் சந்திரசேகர் ஆசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சி தனித்து போட்டியிடும். உத்தர பிரதேசத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக நாங்கள் இருப்போம். எம்.எல்.ஏ., அமைச்சர் பதவிக்கான வாய்ப்பை நிராகரித்து விட்டேன். சமாஜ்வாடி கட்சி எங்களுக்கு 100 இடங்கள் கொடுத்தாலும் அவர்களுடன் செல்ல மாட்டேன்.
தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.வை தடுக்க மற்ற கட்சிகளுக்கு உதவுவோம். நானும் மாயாவதியுடன் கூட்டணி வைக்க முயற்சித்தேன். ஆனால் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. தனிப்பட்ட மகிழ்ச்சியை பற்றி நான் ஒரு போதும் கவலைப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் நான் நிறைய இழந்தேன். ஹத்ராஸ், பிரயாக்ராஜ் மற்றும் உன்னாவ் போன்ற போராட்டங்களுக்காக நான் சிறைக்கு சென்றேன்.
எதிர்க்கட்சி பிரிவினையால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இழப்புதான். பீம் ஆர்மியின் தொண்டர்கள் எங்களது பலம். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக கடந்த 15ம் தேதியன்று சந்திரசேகர் ஆசாத், எதிர்வரும் உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்க சாத்தியமில்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.