×

1 லட்சம் வாக்குச் சாவடிகளில் நேரடி இணைய ஒளிபரப்பு வசதி ... தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை
 

 

எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக சுமார் 1 லட்சம் வாக்குச் சாவடிகளில் நேரடி இணைய ஒளிபரப்பு வசதிகள் இருக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார்.

உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது நாட்டில் புதுவகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் தீவிரமாக பரவி வருவதால் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் திட்டமிட்டப்படி குறித்த காலத்தில் நடக்குமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, உத்தர பிரதேசத்துக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டு அங்கு தேர்தல் தயார்நிலையை ஆய்வு செய்தார். தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா நேற்று லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எங்களை சந்தித்து,  அனைத்து கோவிட்-19 நெறிமுறைகளை பின்பற்றி சரியான நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று எங்களிடம் தெரிவித்தனர். தேர்தல்களின் போது கோவிட்-19 வழிகாட்டுதல்கள் மற்றும் எஸ்.ஒ.பி.க்கள் பின்பற்றப்படும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை  தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5ம தேதி வெளியிடப்படும். கோவிட்-19 சூழ்நிலையை மனதில் கொண்டு வாக்களிக்கும் நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.  அனைத்து வாக்கு சாவடிகளிலும் வி.வி.பி.எ.டி.கள் பொருத்தப்படும். தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக சுமார் 1 லட்சம் வாக்குச் சாவடிகளில் நேரடி இணைய ஒளிபரப்பு வசதிகள் இருக்கும். 

80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள், வாக்குச்சாவடிக்கு வரமுடியாதவர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு தேர்தல் குழு செல்லும். 2017 உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் 59 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. மக்களிடையே அதிக அரசியல் விழிப்புணர்வு உள்ள மாநிலத்தில் ஏன் வாக்கு சதவீதம் குறைவாக உள்ளது என்பது கவலைக்குரிய விஷயம். தற்போதைய கோவிட் சூழ்நிலையில் உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மாபெரும் அரசியல் கூட்டங்கள் குறித்து மாநில சுகாதார செயலாளருடன் விவாதித்தேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அப்போதைய நிலவரத்தை பார்த்து  இந்த பிரச்சினையில் குறிப்பாக வழிகாட்டுதல்களை வெளியிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.