×

பாதயாத்திரை செல்வதாக கூறி அண்ணாமலை கோடிக் கணக்கில் வசூல்- ஜோதிமணி

 

பாதயாத்திரை செல்வதாக கூறி கோடிக்கணக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வசூல் செய்துவருவதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரையை கடந்த ஜூலை மாதம் தொடங்கினார்.  ஜூலை 28ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார். அண்ணாமலை மேற்கொண்டு வந்த பாதயாத்திரை வெற்றிகரமாக இரண்டாம் கட்ட வரை முடிவடைந்தது. இந்த பாதயாத்திரை பாஜகவிற்கு பெரும்  வாக்கு வங்கியை பெற்று தரும் என்று அண்ணாமலை தொடர்ந்து கூறி வந்தார். 

இந்நிலையில் பாதயாத்திரை செல்வதாக கூறி கோடிக்கணக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வசூல் செய்துவருவதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். யாத்திரை என்ற பெயரில் சிறு, குறு தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வருவதாகவும், ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது ஊழலில் ஈடுபட்ட அண்ணாமலை அரசியலில் அதை செய்துவருவதாகவும் ஜோதிமணி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அண்ணாமலை எதற்கு திடீரென்று பாதியில் நிறுத்தி விட்டு வெளிநாடு செல்கிறார் தெரியுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பை வெள்ளை அறிக்கையாக வெளியிட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை வசூல் கொள்ளையில் ஈடுபட்டதற்கு ஆதாரமாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முத்துராமன் என்பவரிடம் ஒன்றரை கோடி ரூபாயும், மதுரை சேர்ந்த ஒருவர் ரூ. 75 லட்சம் ரூபாயும் பெறப்பட்டதற்கான ஆடியோ வெளியாகி உள்ளது.