×

"மத கலவரத்த தான் விரும்புறீங்களா அண்ணாமலை?" - முத்தரசனுக்கு வந்த கோபம்!

 

இந்திய கம்யுனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ''தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உறுதிப்படாத செய்தியை வைத்து கொண்டு அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி செய்கிறது. குறுக்கு வழியில் அவர்கள் தங்கள் கட்சியை தமிழகத்தில் வளர செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். காவல் துறையால் தேடப்படும் குற்றவாளிகளை தங்கள் கட்சியில் பாஜகவினர் இணைத்து வருகிறார்கள்.

எத்தனை மதங்கள் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கிறோம் அதை அழிக்க தான் பாஜக முயற்சி செய்து வருகிறது. தமிழகத்தில் மதவாத அரசியல் வெற்றி பெறாது. தமிழகத்தில் நீட் தேர்வினால் 25 மாணவிகள் உயிரிழந்துள்ளார்கள் அது குறித்தெல்லாம் அண்ணாமலையின் நிலைப்பாடு என்ன? தமிழக பாஜகவினர் நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா அல்லது ஒருவருக்கொருவர் மோதி கொள்ள வேண்டும் என விரும்புகிறார்களா என்பதை விளக்க வேண்டும்.

ஒகேனக்கல் 2வது கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு அனுமதிக்க மாட்டோம் என கூறுவது மனிததன்மையற்றது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் அரசுக்கு ஆதரவாக இருப்போம் என கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த பிரச்சினை மட்டுமல்ல அனைத்து பிரச்சனைகளையும் கட்சி பாகுபாடின்றி அனைவரும் இணைந்து செயல்பட்டால் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கலாம். இலங்கைக்கு நிதி உதவிகள் அளிக்கும் இந்திய அரசு மீனவர்கள் விவகாரம் தொடர்பாக அவர்களை கண்டிக்க மறுக்கிறார்கள்” என்றார்.