×

"புதிய வரலாறு; பாஜக அரசுக்கு மரண அடி" - சிபிஎம் பாலகிருஷ்ணன் பெருமிதம்!

 

விழுப்புரத்தில் மாவட்ட சிபிஎம் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் பாஜக ரவுடிகளை கட்சியில் சேர்த்து பொறுப்பு வழங்கி வருகிறது. இதன் மூலம் பாஜக ரவுடியிசத்தை தமிழ்நாட்டில் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. மோடி ஒட்டுமொத்தமாக தேசத்தை விற்றுக் கொண்டிருக்கிறார். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை எல்லாம் தனியார் கார்ப்பரேட்களுக்கு எப்போது வேண்டுமானாலும் விற்றுவிடுவார்கள். 

ஏற்கெனவே விமானங்களும், ரயில் நிலையங்களும் தனியாருக்கு விற்கப்பட்டு விட்டன. இது குறித்தெல்லாம் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள். 'எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது; உங்களுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது' என்று கேட்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அம்பானிக்கும் அதானிக்கும் கோடிக்கணக்கில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் அரசு, கொரோனாவால் கஷ்டப்படும் மக்களுக்கு ஒரு சல்லி காசு கூட தருவதற்கு முன்வரவில்லை. இவர்களுக்கு ரூ.7,500 கொடுத்தால் என்ன? 

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம் ஓராண்டாக பிடிவாதமாக இருந்த பாஜக அரசுக்கு மரண அடி கொடுத்துள்ளது.
எந்த நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை மோடி அரசு முன்மொழிந்ததோ அங்கேயே அந்தச் சட்டங்களை திரும்ப பெறுகிறோம் என அறிவிக்க வைத்த புதிய வரலாற்றை படைத்த இயக்கம் விவசாய இயக்கங்கள். இந்துத்துவா கொள்கையை எதிர்க்க வேண்டிய கடமை கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு உள்ளது. அதனால் தான் மதச்சார்பற்ற கூட்டணியோடு இருக்கிறோம்” என்றார்.