×

தற்போது அதிமுக அலுவலகத்திற்கு சீல்; அடுத்து இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்- திவாகரன்

 

தற்போது அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர் அடுத்ததாக இரட்டை இலை சின்னத்தை முடக்குவார்கள் இந்த நிலைக்கு காரணம் சிலரது சுயநலம் மட்டுமே என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சுக்கிரன்விடுதி கிராமத்தில் நடைபெற்ற அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகள் இல்ல திருமண சசிகலா மற்றும் அவரது சகோதரர் திவாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், “ஐந்தாண்டு காலமாக வேறு எங்கும் செல்ல பிடிக்காதவர்கள் என்னுடன் பயணித்தார்கள், நானும் அவர்களை விட்டு விடக்கூடாது என்று என்னுடன் வைத்திருந்தேன், தற்பொழுது அனைத்து நிர்வாகிகள் மாநில பொறுப்பாளர்கள்  அனைவரும்  சசிகலாவுக்கு உதவி செய்யக்கூடிய கட்டாயத்தில் உள்ளோம் என்று எண்ணினார்கள், நாளை தமிழகம் முழுவதிலிருந்து 2500 க்கும் மேற்பட்ட  எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சசிகலாவோடு இணைய உள்ளனர்.

மீண்டும் டெல்டா மாவட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளை  
ஒருங்கிணைத்து கொண்டு வருவேன் , அடிப்படை தொண்டர்களை ஒருங்கிணைக்க தற்போது ஆளில்லை, எல்லோரும் இனி சசிகலா பக்கம் வந்து தான் ஆக வேண்டும். இன்று நடந்தது எல்லாம் ஒரு டிராமா நான். இந்த மண்டபத்தில் கூட  பொதுக்குழு கூட்டம் நடந்ததாக சொல்லி இருக்கலாம், என்னதான் எலக்ட்ரானிக்கல் கார்டு கொடுத்தாலும் இன்று நடந்தது பொதுக்குழு கூட்டமே இல்லை. தற்போது அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர். அடுத்ததாக இரட்டை இலையை முடக்குவார்கள். தமிழ்நாடு அரசியலில் இதுபோல்  ஒன்றோடு ஒன்று பிணைந்து கிடைப்பது துரதிஷ்டமான ஒன்று , இதற்கு சிலரின் சுயநலமே காரணம், ஒபிஎஸ் என்ன நோக்கத்திற்காக இன்று அதிமுக அலுவலகத்திற்கு சென்றார் என்பது எனக்கு தெரியவில்லை. அல்லோரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியை நான் எடுப்பேன்” எனக் கூறினார்.