அதிமுக- பாஜக இடையிலான பிரச்னையில் நாம் தலையிடக்கூடாது: உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு மட்டுமல்ல சாதிகள் எங்கு இருந்தாலும் அது தவறு என்பதால் தான் அதற்கு குரல் கொடுத்து வருகிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கூட்டணி கட்சிகளாக இருக்கும் அதிமுகவும், பாஜகவும் சமீபகாலமாக மோதலில் ஈடுபட்டுவருகிறது. இரு கட்சிகளுக்குமிடையே வார்த்தை போர் நிலவிவந்தநிலையில், சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா குறித்து, அண்ணா குறித்தும் பேசியது அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிமுக தலைவர்கள் அண்ணாமலை மீது பகிரங்க விமர்சனங்களை முன்வைத்தனர். பதிலுக்கு அண்ணாமலையும், தான் யாருக்கும் அடிமையில்லை என பகிரங்கமாக தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக தற்போது இல்லை. தனித்து போட்டியிட்டால் பாஜகவுக்குதான் பாதிப்பு, அண்ணாமலையால் நோட்டாவைகூட தாண்ட முடியாது எனக் கூறினார். இதனிடையே அதிமுக உடனான நிலைப்பாட்டில் இருந்து பாஜக மாநில தலைமை பின்வாங்க போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கண்டன தீர்மான நகலும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக- பாஜக இடையிலான பிரச்சனை உட்கட்சிப்பூசல், அதில் நாம் தலையிடக்கூடாது என்றார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் சாதிய பாகுபாடுகள் அதிகம் உள்ளது என்கிறார். நாங்களும் அதைத்தான் சொல்கிறோம், அதனால் தான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறோம். பிறப்பால் அனைவரும் சமம். தமிழ்நாடு மட்டுமல்ல சாதிகள் எங்கு இருந்தாலும் அது தவறு என்பதால் தான் அதற்கு குரல் கொடுத்து வருகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கொண்டுவந்து பொருளாதார துணை செய்த முதலமைச்சரை தாய்மார்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள்” என்றார்.