×

அதிமுக- பாஜக இடையிலான மோதல் எல்லாம் நடிப்பு: உதயநிதி ஸ்டாலின்

 

 

அதிமுகவில் உட்கட்சி பூசல், இன்று அடித்துக் கொள்வது போல் நடித்துக் கொள்கிறார்கள் என உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைக்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்க கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டுமென தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கிறோம்.நீட் தேர்வு ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் மருத்துவர்கள் பெற்றோர்கள் என பல தரப்பினரிடம் திமுக இளைஞரணி சார்பாக மாபெரும் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டதை ஜனாதிபதிக்கு அனுப்பி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த உள்ளோம்.

நீட் தேர்வின் பிரச்சனை தமிழகத்தை தாண்டி தற்போது தான் பிற மாநிலங்கள் இருக்கக்கூடிய மக்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இரண்டு முறை சட்ட போராட்டம் நடத்தி இருக்கிறோம்.  தீர்மானம் இரண்டு முறை நிறைவேற்றி அனுப்பியும், அதனை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். எனவே நீட் தேர்வு பிரச்சினையை மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும். மக்களின் போராட்டத்தினாலே ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு உயிர் கிடைத்தது. மாணவர்கள் எந்த விதத்திலும் தற்கொலை செய்யும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளக் கூடாது, மனம் தளர்ந்து விடக்கூடாது.

அண்ணா திமுக கிடையாது. அமித்ஷா திமுக என்று தான் கூற வேண்டும். உட் கட்சி பூசல் அடித்துக் கொள்வது மாதிரி நடித்துக் கொள்வார்கள். இரண்டு நாள் கழித்து மோடியோ அமித்ஷாவோ போன் செய்தால் இங்கு இருந்து இரண்டு பேரும் பயந்து போய் ஓடி நேரில் சந்தித்து போட்டி போட்டு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்து விட்டு வந்து விடுவார்கள்” என்றார்.