"திருந்தியவர்களை ஏற்பதே அழகு" - ஓபிஎஸ் சொன்ன குட்டி ஸ்டோரி... எகிறிய எடப்பாடியின் பிபி!
சசிகலா விடுதலையானதிலிருந்தே அதிமுகவின் உட்கட்சி பூசல் வீரியம் கொள்ள ஆரம்பித்தது. ஆரம்பத்தில் சின்ன சலனத்தை ஏற்படுத்தினாலும் அதற்குப் பின் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். ஆனால் முழுவதுமாக விலகவில்லை என்பதை அவர் மறைமுகமாக உணர்த்தினார். அதைப் போலவே ஜெயலலிதாவின் நினைவுநாளிலிருந்து அடுத்த ஆட்டத்தைத் தொடங்கியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் தொண்டர்களுக்கு கடிதம், அறிக்கை என எடப்பாடியை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்.
சசிகலா குறித்து பேச்சை எடுத்தாலே அவர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்கிறார். இன்னொரு புறம் ஓபிஎஸ் தரப்பு சசிகலாவை வைத்து காய் நகர்த்தி வருகிறது. வேறு வழியில்லாமல் ஓபிஎஸ்ஸை தவிர்க்க முடியாமல் தவித்து வருகிறார் ஓபிஎஸ். ஓபிஎஸ்ஸின் அண்மைக்கால நடவடிக்கைகளும் பேச்சுகளும் அதை உணர்த்துக்கின்றன. அவர் தர்மயுத்தம் நடத்தியதே ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீதான சந்தேகத்தின் அடிப்படையில் தான். அதனை அன்று அவர் வெளிப்படையாகவே பேசினார். அதை வைத்தே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.
ஆனால் சில மாதங்களுக்கு முன் ஒரு நேர்காணலில், சசிகலா நிரபராதி என்றும் அவர் மீது துளி சந்தேகமும் இல்லை என பேசியது எடப்பாடிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே அதிர்ச்சி தான். அதேபோல சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் பேசி முடிவு எடுப்பார்கள் என க் வைத்து பேசினார். பெரும்பாலான முடிவுகளை எடப்பாடி எடுத்து வரும் நிலையில், அவர் சசிகலாவை வெறுப்புடன் அணுகும் வேளையில் ஓபிஎஸ் இப்படி பேசியது அனலை கிளப்பியது. சசிகலாவின் ஆதரவு நிலைப்பாடு எடுத்து எடப்பாடியிடம் அதிகாரத்தைப் பறிக்கவே இப்படி பேசினார் என்றனர் ஒருசிலர்.
இச்சூழலில் இன்று ஒரு குட்டிக்கதை சொல்லி எடப்பாடியின் பிபி-யை எகிற வைத்திருக்கிறார். அதிமுக சார்பில் சேத்துப்பட்டிலுள்ள முதியோர் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய ஓபிஎஸ் இயேசு கூறிய கதையை சுட்டிக்காட்டினார். அப்போது அவர், "'நான் நல்லவர்களைக் காக்க பூமிக்கு வரவில்லை. பாவத்தை சுமந்து கொண்டிருப்பவர்களை மனம் திருந்தச் செய்யவே வந்திருக்கிறேன்''என இயேசு கூறினார். நல்லவர்கள் என்றும் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆனால், தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே அவர்கள் நல்ல தலைமைக்கு அழகு” என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.