×

உதயநிதி ஸ்டாலினை கொல்லைப்புறமாக அமைச்சராக்க முயற்சி - ஈபிஎஸ்

 

அதிமுகவைச் சேர்ந்த  சி.வி சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான  சான்றிதழை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் சென்னை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளரிடம் பெற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதேப்போல் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் வி.பி துரைசாமி எப்படி பேசுகிறார் என்று நாட்டு மக்களுக்கு தெரியும்.

டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்யும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக முதல்வர கூறிய அன்றைய தினமே சென்னையில் ரவுடிகள் அட்டகாசம் பற்றி ஊடகங்களில் செய்து வந்தது. தமிழகத்தில் தினம்தோறும் கொலை, கொள்ளை  நடக்காத நாட்களே கிடையாது. வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் இந்த அரசு தட்டிக் கேட்க தகுதியில்லாத, திறமையில்லாத அரசாக உள்ளது.  திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு தமிழக மக்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டு பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் காவல்துறையை சரியாக கவனிக்காத காரணத்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. திமுகவைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகுந்து குற்றவாளிகளை காப்பாற்றுகிறார்கள். காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு உள்ளது. காவல்துறை சுதந்திரமாக செயல்பட வில்லை. தமிழகம் முழுவதும் கஞ்சா விற்காத இடங்களே இல்லை. அதை தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலையில் திமுக அரசு உள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு துணை நிற்கின்றனர். வி. பி.துரைசாமி எங்கிருந்து எங்கு சென்றார் என்று நாட்டு மக்களுக்கு தெரியும். அவர் அதிமுகவிற்கு சான்று அளிக்க அவசியமில்லை. ஸ்டாலின் நேரடியாக உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் விமர்சனம் வந்து விடும் என்பதற்காக கொல்லைப்புறத்தில் அமைச்சராக முயற்சி செய்கிறார்” எனக் கூறினார்.