பாஜகவின் மாஸ்டர் பிளான் இதுதான்! அதிமுகவை எச்சரிக்கும் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன்
தமிழகத்தில் ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக தொண்டர்கள் ஒற்றுமைப்பட்டு செயல்படவில்லையென்றால் பாஜக அதிமுகவை பின்னுக்கு தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக மாற முயற்சிக்கும் என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதா கட்சி எந்த மாநிலத்தில் கால் ஊன்றி வளர்ந்தாலும் அந்த மாநிலத்தில் உள்ள ஒரு பிரதான கட்சியை அழித்து வளர்ந்து கொண்டிருப்பது வரலாறு. அதே கோணத்தில் தான் தமிழ்நாட்டிலும் அவர்கள் திட்டமிட்டு பணியாற்றுகிறார்கள். அதிமுகவை கூட்டணியிலேயே வைத்து அழிக்க நினைத்த முயற்சி வெற்றி பெறாது என்ற புரிதல் வந்தவுடன் அதிமுக தலைவர்கள் மீது அவதூறு பரப்பியும், நாடாளுமன்ற தேர்தலில் தகுதிக்கு மீறிய தொகுதிகளை கேட்டும் சங்கடப்படுத்தி அவர்களே கூட்டணியில் இருந்து வெளியேற வழி வகுத்தார்கள்.
OPS அவர்களை தர்மயுத்தம் நடத்த சொல்லி கட்சியை உடைத்ததும் இவர்கள்தான். பிறகு OPS கையை பிடித்து EPS அவர்களோடு இணைத்து செயல்பட வைத்ததும் இவர்கள்தான். சசிகலா அவர்களையும், டிடிவி தினகரன் அவர்களையும் வெளியேற்ற திட்டமிட்டு வெற்றி அடைந்ததும் இவர்கள்தான். OPS, EPS இரண்டு பேரையும் அதிமுகவிலே ஒன்றாக நீடிக்க வைத்து ஆனால் இரண்டு அணியாக செயல்பட வைத்ததும் இவர்கள்தான். EPS அவர்கள் சுதாரித்து கொண்டு அதிமுகவை ஒற்றை தலைமையாக மாற்றிய போது தான் அதிமுகவை கூட்டணியில் வைத்து அழிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு பேரறிஞர் அண்ணா, அம்மையார் ஜெயலலிதா போன்றவர்களை அவமானப்படுத்தி பேசியும் அதிமுகவின் இன்றைய தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசியும் கூட்டணி பிரிவதற்கு காரணமானார்கள். கூட்டணி பிரிந்த தினத்திலிருந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களை புகழ ஆரம்பித்தார்கள். அதன் மூலம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அவர்கள் மீது அசையாத பற்றுக் கொண்டிருக்கின்ற தொண்டர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்தார்கள்.
இதை பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர்கள் முதல் மாநில தலைமை வரை சொல்லி வைத்தது போல செய்தார்கள். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுகவை விமர்சிப்பதையே தவிர்த்து திமுகவை மட்டுமே விமர்சித்தார்கள். இப்போது ஜெயலலிதா அவர்களை இந்துத்துவா தலைவர் என்று சொல்லி அதிமுகவை மத ரீதியாக பிரித்து அதிமுகவில் இருக்கின்ற இந்துக்களை பாஜக பக்கம் இழுத்து அதிமுகவை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். தமிழகத்தில் அதிமுக தொண்டர்களிடம் இது எடுபடுமா என்று தெரியாது ஆனால் பாஜகவினுடைய நோக்கம் அதிமுகவை அழித்து தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக தங்களை நிலை நிறுத்திக் கொள்வது தான். தமிழ்நாட்டில் அதிமுக தொண்டர்கள் ஒற்றை தலைமையின் கீழ் ஒன்றுபட்டு நிற்கவில்லை என்றால் பாஜக நினைத்ததை சாதிப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. அதிமுக தொண்டர்கள் விழித்துக் கொள்வார்களா அல்லது ஏமாந்து போவார்களா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.