×

"மக்கள டிஸ்டர்ப் பண்ண கூடாது சரியா" - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ அட்வைஸ்!

 

முக்கோண காதல் கேள்விப்பட்டிருப்பீர்கள். முக்கோண விரிசலை கேள்விப்பட்டதுண்டா? இப்போது அதிமுக, பாஜக, பாமகவிற்குள் நிகழ்ந்து கொண்டிருப்பது அது தான். ஏற்கெனவே அதிமுகவுடனான கூட்டணி உறவை பாமக முறித்துவிட்டது. அதற்குக் காரணம் சட்டப்பேரவை தேர்தலில் பாமகவை அதிமுக நிர்வாகிகள் காலை வாரிவிட்டதுதான். இவ்வளவு நாளும் கூட்டணியை விட்டு விலகியதற்கான காரணத்தை வெளியில் சொல்லாத அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், நேற்று வெளிப்படையாகவே போட்டு உடைத்துவிட்டார். கூட்டணி தர்மம் என்றால் காலை வாரிவிடுவது தானா நேரடி கேள்வி கேட்டுள்ளார்.

இது ஒருபுறம் என்றால் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகவா பாஜகவா என்ற சந்தேகம் வரும் வகையில் பாஜகவின் செயல்பாடுகள் இருக்கின்றன. அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எவருமே டிவி விவாதங்களில் கலந்துகொள்வதில்லை. ஆனால் பாஜக ஆதரவாளர்களோ வரிந்துகட்டி விவாதத்தில் ஈடுபடுகிறார்கள். அதேபோல அவர்களின் தலைவர்களும் எதையாவது ஒன்றை சொல்லி திமுக அமைச்சர்களை வம்புக்கிழுக்கின்றனர். திடீரென அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனை அதிமுக தலைமை ரசிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்தக் கூட்டணியும் அறுந்து விழலாம் என சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு கேள்விகள் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் முன்வைக்கப்பட்டன. அதற்குப் பதிலளித்த அவர், "தமிழ்நாட்டில் பாஜக வளரும் கட்சி என்பதால் அவர்களின் செயல்பாடுகள் அப்படி தான் இருக்கும். யார் போராட்டம் நடத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. மக்களைக் கவரும் வகையில், எண்ணத்தை பிரதிபலிக்கிற போராட்டத்தை, அரசுக்கு வலுவான கருத்தை எடுத்துரைக்கும் போராட்டமாக இருக்க வேண்டும். 

போராட்டம் போராட்டம் என்று மக்களை தொந்தரவு செய்யவோ, இடையூறு செய்யவோ தலைவர்கள் விரும்பவில்லை” என்றார். அதேபோல ராமதாஸ் குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு அவர், "அதிமுக, பாமக கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. அப்படி அவர்கள் விலகிய பின் பேசும் கருத்துகளுக்கு எப்படி நாங்கள் பதில் சொல்ல முடியும்? பாமகவினர் பேசுவதற்கு அதிமுகவின் தலைமை பதில் சொல்லும்” என்றார். மேலும் அவர், "நகர்ப்புற தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்" என்றும் கூறினார்.