×

பஞ்சாபில் ராகுல் காந்தி கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பங்கேற்காததால் பரபரப்பு

 

பஞ்சாபில் அமிர்தசரஸில் ராகுல் காந்தி கலந்து கொண்ட கூட்டத்தில் அம்மாநில காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேர் பங்கேற்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபில் 117 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 20ம் தேதி தொடங்குகிறது. ஒரு சில கட்சிகளை தவிர்த்து பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நேற்று ஒரு நாள் பயணமாக பஞ்சாப் சென்று இருந்தார்.

அமிர்தசரஸில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில், பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி.க்கள் மணிஷ் திவாரி, ரவ்னீத் சிங் பிட்டு, ஜஸ்வீர் சிங் கில், முகமது சாதிக் மற்றும் கேப்டன் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர் ஆகியோர் பங்கேற்கவில்லை. இது காங்கிரஸ் கட்சி உள்ளேயும், பஞ்சாப் அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதேசமயம் இந்த கூட்டம் தொடர்பாக யாரும் தகவல் தெரிவிக்கவில்லை அதனால் செல்லவில்லை என்று ஜஸ்பிர் சிங் கில் தெரிவித்தார். இது தொடர்பாக ஜஸ்பிர் சிங் கில் கூறுகையில், கூட்டத்துக்கு செல்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த நிகழ்வு (கூட்டம்) 117 வேட்பாளர்களுக்கானது என்பதை நாங்கள் அறிந்தோம். பஞ்சாப் காங்கிரஸ் தலைவரோ அல்லது முதல்வரோ எங்களை அழைக்கவில்லை, பொறுப்பு பொதுச்செயலாளர் கூட அழைக்கவில்லை. அழைத்திருந்தால் கண்டிப்பாக சென்றிருப்போம் என்று தெரிவித்தார்.