×

அலிகார் பல்கலைக்கழகம் ஜின்னாவின் பெரிய படத்தை வைக்க வேண்டும்.. உ.பி. முன்னாள் கவர்னர் சர்ச்சை பேச்சு

 

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உண்மையில் ஜின்னாவின் பெரிய உருவப்படத்தை வைக்க வேண்டும் என்றும், அதை எதிர்ப்பவர்கள் பற்றி கவலைப்படக்கூடாது என்றும் உ.பி முன்னாள் கவர்னர் அஜீஸ் குரேஷி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமானவரும், பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்படுவருமான முகமது அலி ஜின்னாவை உத்தர பிரதேச தலைவர்கள் புகழ்ந்து பேசி சர்ச்சையை கிளப்பி வருவது தற்போது வாடிக்கையாக உள்ளது. சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முகமது அலி ஜின்னாவை காந்தி, சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட தலைவர்களுடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சைக்கு வழி வகுத்தார்.

தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், உத்தர பிரதேச முன்னாள் கவர்னருமான அஜீஸ் குரேஷி, முகமது அலி ஜின்னாவின் பெயரை பயன்படுத்துவது குற்றம் இல்லை என்று பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அஜீஸ் குரேஷி கூறியதாவது: முகமது அலி ஜின்னாவின் பெயரை பயன்படுத்துவது குற்றம் இல்லை. ஜின்னா மிக உயர்ந்த தேசியவாதி. காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான தலைவர்களில் அவர் முதன்மையானவர். அவர் காங்கிரஸில் 20 ஆண்டுகள் கழித்தார். ஆனால் பின்னர் அவர் கட்சியை விட்டு வெளியேறினார்.

எனக்கு உண்மையை பேசும் தைரியம் இருப்பதால் ஜின்னாவை பற்றி என்னால் அப்படி சொல்ல முடியும். திலகர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டபோது, தனது வழக்கை எதிர்த்து போராட ஜின்னாவை திலகர் அழைத்தார். பம்பாய் உயர் நீதிமன்றம் தனது நூற்றாண்டு புத்தகத்தில் ஜின்னாவுக்கு ஒரு அத்தியாயத்தை அர்ப்பணித்துள்ளது. மும்பையில் ஜின்னா ஹவுஸ் வைத்திருக்கிறார்கள். ஏன் அவருடைய எதிரிகள் அங்கு சென்று அந்த இடத்தை இடிப்பதில்லை? முஸ்லிம்கள், தாழ்வு மனப்பான்மை காரணமாக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் குறிவைக்கப்படுகிறது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உண்மையில் ஜின்னாவின் பெரிய உருவப்படத்தை வைக்க வேண்டும், அதை எதிர்ப்பவர்கள் பற்றி கவலைப்படக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.