"இருமுனை கத்தி பின்னாலும் பாயும்... மைண்ட் இட்" - திமுகவுக்கு ஹெச்.ராஜா வார்னிங்!
முன்னாள் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வாஜ்பாய் 97ஆவது பிறந்தநாளையொட்டி மதுரை மாநகர் பாஜக சார்பில் நல்லாட்சி நாள் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதற்கு மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் தலைமை வகித்தார். அதேபோல தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இதில் பேசிய நமச்சிவாயம், "கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் முயற்சியால் புதுச்சேரியில் பாஜக கூட்டணி வென்றது.
தற்போது அங்கு பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அடுத்த தேர்தலில் புதுச்சேரியில் பாஜக தனித்து ஆட்சியமைக்கும். பாஜவின் ஆட்சி புதுச்சேரியுடன் நின்று விடாமல் தமிழகத்திலும் ஆட்சிக்கு வர வேண்டும். அது தான் எங்களின் விருப்பம். தமிழகத்தில் பாஜக நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது. பாஜகவை எதிர்க்க அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றினைய வேண்டும் என செல்கிறார்கள். அனைவரும் சேர்ந்தால் கூட பாஜகவை வீழ்த்த முடியாது” என்றார். அவரை தொடர்ந்து பேசிய ஹெச்.ராஜா, "காசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்றுக் கொடுப்ப தற்காக பாரதியார் பெயரில் இருக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழக பல்கலைக்கழகத்தில் கவி காளிதாஸ் இருக்கை ஏற்படுத்தி சம்ஸ்கிருதம் கற்றுக்கொடுப்பார்களா?” என கேள்வியெழுப்பினார். நிகழ்ச்சி முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, "முன்னாள் அமைச்சர்கள் மீது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. பழி வாங்கும் நடவடிக்கை என்பது இரு முனை கத்தி, திமுக - அதிமுக மாறி மாறி ஆட்சி செய்துள்ளது. முன்ன பாய்ந்த வாய்க்கால் பின்ன பாயும் என திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.