×

ஒகேனக்கல்  2வது  கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்க்க கர்நாடகாவுக்கு  உரிமை இல்லை - ஓபிஎஸ் கண்டனம்..

 

ஒகேனக்கல்  2வது  கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒகேனக்கல் 2வது கட்ட கூட்டு குடிநீர் திட்டம்  ரூ. 4, 600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கர்நாடக அரசு,  ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும்   காவிரி குண்டாறு உள்ளிட்ட  தமிழக அரசின்  திட்டங்களை செயல்படுத்த  அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.  இந்த திட்டங்களை எதிர்த்து அரசியல் ரீதியாகவும்,  சட்ட ரீதியாகவும் போராட்டம் நடத்துவோம் என்றும் அம்மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோள்  தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு  தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிர்த்து வருகின்றனர். அந்தவகையில்  அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள  அறிக்கையில்,  “தமிழ்நாட்டில் எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதனை எதிர்ப்பது என்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது கர்நாடக அரசு.  அந்த வகையில் தற்போது ஒகேனக்கல் 2வது கூட்டு குடிநீர் திட்டத்திற்கும்  தனது எதிர்ப்பினை கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.  கர்நாடக அரசின் இந்த எதிர்ப்பிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


 
காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாடு கீழ்ப்பகுதி மாநிலம்,  சட்டப்படி தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய நீரை கூட திறந்து விட மறுப்பதோடு,   கர்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு உபரி நீரை திறந்து விடுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிற  கர்நாடக அரசுக்கு,  தமிழ்நாட்டிற்குள் மேற்கொள்ளவிருக்கும் ஒகேனக்கல் 2வது கூட்டு குடிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்த தார்மீக ரீதியாகவும்,  சட்ட ரீதியாகவும் உரிமை இல்லை.

 இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டிற்கு உண்டு.  இதனை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்ற வேண்டும்.  இதற்கு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது முழு ஆதரவினை நல்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்