×

திருமாவுக்கு திமுக கேள்வி : ‘’ஒரே சாதி என்ற போது எப்படி ஆணவக் கொலையாகும் ? ’’
 

 

காதலின் மீதான வெறுப்பு அரசியல் இங்கே தொடர்ந்து விதைக்கப்பட்டதன் விளைவால் ஒரே சாதி எனினும் கிருஷ்ணகிரி ஜெகன் ஆணவப் படுகொலை. பெற்ற மகளையே விதவையாக்கிய குரூரம். சாதி கவுரவம்,  குடும்ப கவுரவம் போன்றவை சனாதனத்தின் கேடான உளவியல். இத்தகைய தீங்கான போக்கு துடைத்தெறியப்பட வேண்டும் என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்.  28 வயதான இந்த வாலிபர் சரண்யா என்ற இளம் பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள் . பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி சரண்யாவை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் ஜெகன்.  இதனால் பெண் வீட்டார் ஜெகன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து உள்ளனர்.

 இந்த நிலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஜெகனை பெண்ணின் தந்தை சங்கர் அவரது உறவினர்கள் சேர்ந்து நடுரோட்டில் பைக்கை வழிமறித்துள்ளனர்.   கீழே விழுந்து கிடந்த ஜெகனை சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.  இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

இதற்குத்தான் திருமாவளவன் மேற்கண்ட கண்டத்தை பதிவு செய்திருக்கிறார்.  

எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி   ‘’கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில், நடுரோட்டில் இளைஞர் கழுத்தறுத்து ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது நெஞ்சைப் பதற வைக்கிறது.  அரசியல் கொலை, ஆதாயக்கொலை, ஆணவக்கொலை என குற்றவாளிகள் அச்சமின்றி வாடிக்கையாக செயல்படும் இந்த விடியா ஆட்சியில் தமிழ்நாடே கொலைக்களமாக மாறிப் போயிருப்பது வேதனைக்குரியது’’என்று பதிவிட்டு இருக்கிறார்.

இதற்கு திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி,  ‘’சம்பந்தப்பட்ட அனைவருமே, ஒரே சாதி என்ற போது, எப்படி ஆணவக் கொலையாகும் ?’’என்று கேட்கிறார்.

உடனே, ‘’யார் அப்படி சொன்னது? பெயரை குறிப்பிட கூட அச்சம் ஏன்? கூட்டணியில் இருந்தாலும் போனது ஒரு உயிர்.தைரியமாக பெயரை சொல்லவும்!’’என்கிறார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.

சம்பந்தப்பட்ட அனைவருமே, ஒரே சாதி என்ற போது, எப்படி ஆணவக் கொலையாகும் ? என்று ராஜீவ்காந்தி கேட்பது, திருமாவளவனை பார்த்தும் கேட்பது போல் இருக்கிறது என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.