×

ஸ்டாலினுக்கு மட்டும் விருந்தாளி ஆனதெப்படி? சீமான் கேள்வி
 

 

மோடி வரும்போதெல்லாம் பலூன் விட்டு விளையாடுவதா? என்று திமுகவினர் மீது  பாஜகவினர் கொந்தளிக்கும் அளவிற்கு  பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் திமுகவினரும் கூட்டணி கட்சியினரும்  கறுப்புக்கொடி காட்டினார்கள்.  

வரும் 12ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கறுப்புக்கொடி காட்டும் எண்ணத்தில் இருந்தனர் திமுகவினர்.  ஆனால்,  கறுப்புக்கொடி காட்டக்கூடாது என்று அவர் நம் விருந்தாளி வரவேற்க வேண்டும் என்று திமுக தலைமை அக்கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறதாம்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக,  பிரதமர் மோடிக்கு திமுக ஏன் கருப்புக் கொடி காட்ட வேண்டும்? எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் அவருக்கு கருப்புக்கொடி காட்டினோம். .  ஆனால் இப்போது நாங்கள் அவரை விருந்தினராக அழைத்து இருக்கிறோம். அவர் தமிழகத்தின் விருந்தினராக வருகிறார். நாங்களே அழைத்துவிட்டு நாங்களே கருப்பு கொடி காட்டினால் அது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்.    தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடியை நாங்கள் அழைத்திருக்கிறோம்.  அதன் அடிப்படையில்தான் அவர் தமிழகம் வரவிருக்கிறார்.  இப்படிப்பட்ட நிலையில் நாங்கள் எப்படி அவருக்கு கருப்புக்கொடி காட்ட முடியும்.  எங்களுக்கு எதிராக அவர் ஏதாவது பேசியிருந்தால் அப்போது நாங்கள் அவரை தவிர்த்து இருப்போம்.  மோடி எங்களுக்கு எந்த காலத்திலும் எதிரியாக இருந்தது இல்லை.  பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி அல்ல என்று சொல்லியிருக்கிறார்.

 கடந்த அதிமுக ஆட்சியின்போது பிரதமர் மோடி வந்தபோதெல்லாம்  திமுகவினரும் கூட்டணி கட்சியினரும்  கறுப்புக்கொடி காட்டினார்கள்.  அது குறித்து பேசிய ஆர். எஸ். பாரதி ,  அதிமுக ஆட்சியின் போது அவருக்கு கருப்புக்கொடி காட்டி நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம் என்றால் அவர் தமிழர்களுக்கு எதிராக அப்போது செயல்பட்டார்.  அதனால் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தோம் என்கிறார்.

இதனால்,  ‘’ஆட்சிக்கு வருமுன் #GoBackModi என்றவர்கள் அதிகாரத்தில் அமர்ந்ததும், 'பிரதமர் மோடி வருகையை எதிர்க்கமாட்டோம்; அவர் எங்கள் பகையாளி அல்ல; விருந்தாளி' என்கிறார்கள்’’ என்று சொல்லும்  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

’அம்மையார் மம்தாவுக்கும், ஐயா பினராயி விஜயனுக்கும் பகையாளியாக இருப்பவர், ஐயா ஸ்டாலினுக்கு மட்டும் விருந்தாளி ஆனதெப்படி?பகையாளி என்பது விருந்தாளியானது போல, நாளைக்கு விருந்தாளி கூட்டாளியாகவும் மாறி, மக்களை ஏமாளியாக்கிக் கறுப்புக்கொடியைக் கீழே வீசிய கரங்கள், காவிக்கொடியைக் கையிலேந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை’’ என்கிறார்.