×

அடுத்து ஆளுநர் பதவியா? இசைஞானியின் அரசியல் பயணம்

 

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்துவரும் இளையராஜாவை தெரியாதவர் எவரும் இல்லை. அந்த அளவுக்கு பரிச்சையமான இவர், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் இசையமைத்து அசத்துகிறார். 3 தலைமுறைகளுடன் இசையுடன் பயணிக்கும் இளையராஜா இசையோடு மட்டுமல்லாது அரசியல் பக்கமும் பயணித்துவருகிறார்.

இளையராஜாவுக்கு எம்.பி. பதவி

விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன எம்பி பதவி வழங்கப்பட்டது. அந்த பட்டியலில் இளையராஜாவும் இடம்பிடித்தார். எம்பி பதவி வழங்கியதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாக இளையராஜா பிரதமர் மோடியிடமிருந்து கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்றார். இளையராஜாவின் இத்தனை ஆண்டுகால கலைச்சேவைக்கு கிடைத்த பரிசு என நாம் நினைத்தாலும், சாதி அடிப்படையில், தலித் என்ற காரணங்களுக்காகவே இளையராஜாவுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது எனவும், வாழ்வில் எந்த அளவுக்கு உயரத்திற்கு சென்றாலும் சாதிய இழிவு ஒழியவில்லை என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல அரசியல் விமர்சகர்களும் விமர்சித்திருந்தனர்.

நாடாளுமன்றத்தில் ’ஆப்செண்ட்’

எம்பி பதவி பெயர் அளவுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது எனக் கூறலாம். காரணம் கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடந்தது.   13 நாட்கள் நடந்த இந்த குளிர்கால கூட்டத் தொடரில் நியமன எம்பிக்களில் இசையமைப்பாளர் இளையராஜா ஒருநாள் கூட கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. அவரது வருகைப்பதிவு பூஜ்ஜியமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, பதவி ஏற்பு விழாவில் கூட இளையராஜா பங்கேற்கவில்லை என்பது தான் ஆச்சர்யம். நாடாளுமன்றத்தின் முதல் நாளிலேயே இளையராஜா ஆப்செண்ட் தான். காரணம் கேட்டால் அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறி சமாளித்தார்.

மோடியை புகழ்ந்ததால் எம்.பி. பதவி

கடந்த ஆண்டு இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடியுடன் அம்பேத்கரை ஒப்பிட்டு பேசியதற்காகவே எம்பி பதவி வழங்கப்பட்டது எனக் கூறப்பட்டது. அதாவது, அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இளையராஜா, மோடியின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாக கொண்டவை. பெண்கள், விளிம்புநிலை மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என மோடியை பாராட்டி தள்ளினார். இதற்கு பிரதமர் மோடி, இளையராஜாவை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தாக தெரிகிறது. இதனாலேயே இளையராஜாவுக்கு எம்பி பதவி வழங்கப்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டன. இப்படியே மோடியையும், ஆளும் பாஜக அரசையும் வண்டி வண்டியாக புகழ்ந்தால், இளையராஜாவுக்கு ஆளுநர் பதவி கூட கிடைக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.