உட்கட்சி தேர்தல், பொதுக்குழு, மாநாடு - எடப்பாடி விறுவிறு
எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களை திரட்டி பொதுக்குழுவைக் கூட்டி தன்னை அதிமுக பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டார். ஆனால் அந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவித்திருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். இந்த போட்டா போட்டியில் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார் அமித்ஷா. ஆனாலும், அதிமுக என்றால் ஒற்றைத்தலைமை; அது தனது தலைமையின் கீழ்தான் என்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி.
இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தீவிர நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார் எடப்பாடி. ஊட்கட்சித் தேர்தல் நடத்தி பொதுக்குழுவை கூட்டி மாநாடு நடத்தவும் அவர் ஏற்பாடு செய்து வருகிறார். முன்னதாக கட்சி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்த எடப்பாடி அதற்காக வேலைகளை முடிக்கி விட்டிருக்கிறார்.
ஏற்கனவே அதிமுகவிற்கு ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருப்பதாக அக்கட்சி சொல்லி வரும் நிலையில் கூடுதலாக 50 லட்சம் பேரை சேர்க்கும் பணியை செய்ய கட்சியினருக்கு உத்தரவிட்டு உள்ளார் எடப்பாடி. கட்சி நிர்வாகிகளும் அதன்படியே செய்து வருகின்றனர். புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வரும் ஐந்தாம் தேதி முதல் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
கட்சியில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க இளம்பெண்கள், இளைஞர் பாசறை புதுப்பிக்கப்பட இருக்கிறது. சமூக வலைத்தள அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பதால் அதிமுகவின் ஐடி அணியை பலப்படுத்த புதிய நிர்வாகிகளை நியமித்து அதற்காக சென்னையில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. வழக்கறிஞர்கள் அணியை பலப்படுத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் கட்சியினரின் சட்ட பிரச்சனைகளை எதிர் கொள்ளவும் தயாராகி ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சென்னை தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் வார்ரூம் துவங்கப்பட இருக்கிறது.
கட்சியின் அஸ்திவாரமாக உள்ள பூத் கமிட்டிகளை வலுப்படுத்த மும்முரம் காட்டி வருகின்றனர். சென்னை , மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், விழுப்புரம் என்று ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட இருக்கிறது. இந்த ஆறு மண்டலங்களுக்கும் தலா ஒரு பொறுப்பாளரை நியமித்து அவர்களின் தலைமையில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் கண்காணிக்கப்பட இருக்கின்றன. இவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் செயல்படாத மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட இருக்கிறார்கள்.
அதிமுகவில் தற்போது நடந்து வரும் உறுப்பினர் சேர்க்கை முடிவடைந்ததும், உட்கட்சி தேர்தல் தொடங்கப்பட்டு டிசம்பர் மாதத்தில் பொதுக்குழு நடத்தப்பட இருக்கிறது . ஆகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை பறைசாற்றுகின்ற விதத்தில் மதுரையில் மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது . இந்த மாநாட்டுக்கான பணி குழுவினை விரைவில் நியமிக்க இருக்கிறார் எடப்பாடி.