×

அடுத்த தலைமைச்செயலாளர் இவரா? முதல்வர் ஏன் இவரை டிக் செய்தார்?

 

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் இவர்தான் என்ற  பரபரப்பு எழுந்திருக்கிறது.  அடுத்த தலைமைச் செயலாளர்கள் யார் என்ற பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் இவரைத்தான் டிக் செய்து இருக்கிறார் என்ற தகவல் பரவுகிறது.

 தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.  இதனால் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்திருக்கிறது.  இந்த பதவிக்கான பட்டியலில் சிவதாஸ் மீனா, முருகானந்தம், அதுல்யா மிஸ்ரா , கார்த்திகேயன்,  விக்ரம் கபூர், ஹன்ஸ்ராஜ் வர்மா,  எஸ். கே. பிரபாகர் உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன. இதில் சிவதாஸ் மீனாவின் பெயரைத் தான் முதல்வர் டிக் அடித்திருக்கிறார் என்று தகவல் பரவுகிறது.

 1989 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச் சிவதாஸ் மீனா.  ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவர்.  ஜெய்ப்பூரில் மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்தவர் . ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலை பெற்றவர்.  30 ஆண்டுகள் ஐஏஎஸ் பணியில் அனுபவம் வாய்ந்தவராக உள்ளார்.  முதல்வர் ஸ்டாலின் குட் புக்கில் இவர்தான் இருக்கிறார் என்கிறார்கள் .

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்கு செயலாளர்களில் ஒருவராக பணிபுரிந்துள்ளார் சிவதாஸ் மீனா.  ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது சிவதாஸ் மீனா மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.  ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் மீண்டும் சிவதாஸ் மீனா தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார் .

தற்போது நகராட்சி நிர்வாக துறை செயலாளராக பதவி வைத்து வருகிறார் சிவதாஸ் மீனா . அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்துவதற்கும் அரசின் இயந்திரம் வேகம் குறையாமல் சீராக இயங்குவதற்கும் சிவதாஸ் மீனா பொருத்தமானவர் என்று முதல்வர் நினைப்பதாக தகவல் . இதனால்தான் அவரை டிக் செய்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இறையன்புவின் செயல்பாடுகள் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் பிடித்ததால் அவருக்கே பணி நீட்டிப்பு வழங்கலாம் என்று  யோசனை இருந்திருக்கிறது.  ஆனால் அதிமுக ஆட்சிக்காலத்தில் தலைமைச் செயலாளர்,  டிஜிபிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதற்கு அப்போது எதிர்க்கட்சியின் தலைவராக இருந்த ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது அதையே தான் செய்தால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யும் என்பதால் புதிய தலைமைச் செயலாளரை நியமிக்க அவர் முடிவு எடுத்து இருக்கிறார் . 

அதே நேரம்  இறையன்புவுக்கு பணி ஓய்வு கொடுக்காமல் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க முடிவெடுத்து இருக்கிறார்.  இது குறித்து அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர்,  ‘’ இறையன்பு ஐஏஎஸ் வரும் ஜூன் 30-ஆம் தேதி அன்று ஓய்வு பெற்ற பின்னர் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவதாஸ் மீனா தலைமைச் செயலாளராக பொறுப்பேற்க இருக்கிறார்.   இறையன்புக்காக ஐந்து மாதங்களாக காலியாக வைக்கப்பட்டு இருக்கும் தலைமை தகவல் ஆணையராக  இறையன்பு நியமிக்கப்பட இருக்கிறார்’’என்று கூறியிருக்கிறார்.