×

திமுகவை விமர்சித்ததால் மட்டுமே மாரிதாஸ்  கைதா? - அண்ணாமலை விளக்கம்

 

பிரபல யூடியூபர் மாரிதாஸ் நேற்று மதுரையில் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.   சமூக வலைத்தளங்களில் யூடியூப் மற்றும் டுவிட்டரில் தீவிரமாக இயங்கி வந்தவர் மாரிதாஸ்.   குறிப்பாக இவர் திமுகவை கடுமையாக விமர்சித்து வீடியோ மற்றும் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

 ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் மணிகண்டன் மறுநாள் உயிரிழந்த விவகாரத்தில்,  போலீசார் அடித்ததால் தான் மாணவர் இறந்ததாக கூறி வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று மணிகண்டனின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.  கல்லூரி மாணவர் மணிகண்டனின் உயிரிழப்பு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸ் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில்,  நேற்று காலையில் தனது ட்விட்டர் பக்கத்தில்,  ‘’திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா.  தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்’’ என்று பதிவிட்டிருந்தார்.

 இந்த டுவிட்டர் பதிவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.   இதையடுத்து மதுரை புதூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாரிதாசை கைது செய்தனர்.  கை செய்வதற்கு முன்னால் பாஜகவினர் மாரிதாஸ் வீட்டு முன்பாக குவிந்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  முன்னாள் எம்எல்ஏவும் பாஜக பிரமுகருமான சரவணன் போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்.  ஆனால் அதன் பின்னரும் போலீசார் கைது செய்து சென்றனர் .  இதனால் போலீசுக்கும் திமுக அரசுக்கும் எதிராக பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பினர்.

மதுரையில் மாரிதாஸ்  காவல்துறையால் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டறிந்து, அவரிடம் தொலைபேசி மூலமும் உரையாடியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.  அவர் இது குறித்து,   ஜனநாயகம் அளித்த கருத்துரிமையைப் பொருட்படுத்தாமல் பாரபட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  தி.மு.க-வை விமர்சித்தால் மட்டும் கைது? இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை.   ஒருபக்கம் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய ஏவல் படையை தயார் செய்தும், இன்னொருபக்கம் தேசியவாதிகளை அறிவாலயம் அரசு கைது செய்கிறது!  இந்த கபட நாடகத்தை  தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது!  என்று தெரிவித்திருக்கிறார்.