×

”வாய் தவறி பேசிவிட்டேன்..” - மன்னிப்புக் கேட்டாரா சாட்டை துரைமுருகன் ??

 

நாம் தமிழர் கட்சியில் தீவிர செயற்பாட்டாளராக இருந்து வந்தவர்  சாட்டை துரைமுருகன். இவர்  ’சாட்டை’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் இருவரையும் ஒப்பிட்டு அவதூறாக பேசியதாக  கூறப்படுகிறது.   இந்நிலையில் தான்  கடந்த அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில், நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சாட்டை துரைமுருகன் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. 

அதனை கண்டித்து நாடு முழுவதும் திமுகவினர் , சாட்டை துரைமுருகனுக்கு  எதிராக கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே தக்கலை உதவி ஆய்வாளர் ராஜசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் துரைமுருகனை நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்தனர் இந்த வழக்கில் தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சாலை துரைமுருகனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. .

இவர் அவ்வப்போது அரசியல் தலைவர்கள் குறித்து மோசமாக சித்தரித்து வீடியோ வெளியிடுவதும், அதனால் கைதாகி பின்னர் மீண்டும் ஜாமீனில் வெளிவரும் அடிக்கடி ஏற்படும் நிகழ்வுதான்.  ஏற்கெனவே  ஜாமீன் வழங்கியபோது நீதிமன்றம் துரைமுருகனுக்கு கடுமையான நிபந்தனைகளையும் விதித்திருந்தது.  யாரையும் புண்படுத்தி வீடியோ வெளியிடவோ,பதிவேற்றம் செய்ய கூடாது என்று கூறியிருந்தது. அதையும் மீறி அவதூறு வீடியோக்களை பதிவேற்றி வந்தார்.

இந்நிலையில் உணர்ச்சி வேகத்தில் தான் அப்படி பேசியதாகவும், இனி தான் அதுபோல் பேச மாட்டேன் என்று அவர் ஜாமீன் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். ஜாமீன் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அதில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதனைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.