×

இயல்பு நிலைக்கு திரும்பியதா அதிமுக?

 

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் பெரும் சலசலப்புகளும் சச்சரவுகளும் நிலவி வந்தன.  அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அதிமுக மீண்டும் ஒற்றைத் தலைமைக்கு வந்திருக்கிறது. 

 எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்திருக்கிறது.   இதை அவரது அணியினர் கொண்டாடி வருகின்றனர்.   இதை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அதிமுகவினர் பூங்கொத்து மற்றும் சால்வைகள் கொடுத்து கொடுத்து  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.   வாழ்த்து சொல்ல வரும் பாதி பேர்  பழனிச்சாமியின் காலில் விழுந்து வணங்கி செல்கிறார்கள்.  ஒருவரை கூட எடப்பாடி பழனிச்சாமி காலில் விழ வேண்டாம் என்று தடுக்கவே இல்லை.   எவரையும் அவர் தூக்கி விடவும் இல்லை.  அவர்களாகவே பொத் பொத்தென்று காலில் விழுந்து வணங்கி விட்டு செல்கிறார்கள்.

ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்தபோது காலில் விழும் கலாச்சாரம் பெரிய அளவில் பேசப்பட்டது.  அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கியது தான் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சிறிது காலம் அதிமுகவில் அப்படி ஒரு போட்டோ,  வீடியோக்கள் வெளிவராமல் இருந்தன.

 இந்த நிலையில் மீண்டும் அதிமுக ஒற்றைத் தலைமைக்கு வந்திருப்பதை முன்னிட்டு  எடப்பாடி பழனிச்சாமியின் காலில் விழுந்து வணங்கும் வீடியோக்கள் போட்டோக்கள் வைரல் ஆகி வருகின்றன.   இந்த ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் கடந்த சில மாதங்களாக சச்சரவுகள் இருந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கும் நிலையில் அதிமுக இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது.   ஆனால் சன் நியூஸ் தொலைக்காட்சியோ,   ’இயல்பு நிலைக்கு திரும்பியதா அதிமுக?’ என்ற தலைப்பிட்டு  எடப்பாடி பழனிச்சாமியின் காலில் தொண்டர்கள் விழும் வீடியோவை வெளியிட்டுள்ளது.    ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் காலில் விழும் கலாச்சாராம் கொஞ்சம் ஓய்ந்திருந்தது.  தற்போது மீண்டும் திரும்பிருக்கிறது என்பதையே குறிப்பிடுகிறது அந்த தலைப்பு.