×

அதிமுகவிற்கு தைரியம் இல்லை என்பது உண்மை தான் - டிடிவி தினகரன் பொளேர்
 

 

முதுகெலும்பில்லாமல் இருக்கிறார்கள்.  அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை . சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை .  அதிமுக மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவது இல்லை.   பாஜக எதிர்க்கட்சி இல்லை என்றாலும் துணிந்து கேள்வி எழுப்புகிறது . பாஜக தலைவர் அண்ணாமலை துணிந்து கேள்வி எழுப்பி வருகிறார்    என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடியது கூட்டணிக்குள் பெரிதாக வெடித்தது.

 தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று நயினார் நாகேந்திரன் சொன்னது அவ்வளவாக சரியாக இல்லை. ஆனாலும்,  அண்ணாமலை முறையான விளக்கத்தினை கொடுத்திருந்தார்.    நயினார் நாகேந்திரன் பேசியவை பாஜகவின் கருத்துக்கள் அல்ல.  அவரும் அதை பேச வேண்டும் என்று நினைக்கவேயில்லை. எதையோ பேச ஆரம்பித்து அப்படி பேசிவிட்டார்.  அவர் பேசியது தவறுதான்.  அதற்காகத்தான்  எடப்பாடிபழனிச்சாமியின் பேசி வருத்தத்தை தெரிவித்துக்கொண்டேன் என்று தெரிவித்திருந்தார்.

ஆனாலும்,  நயினார் நாகேந்திரனின் இந்த பேச்க்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருவது ஒரு பக்கம் இருக்க,  ஊராட்சி தேர்தலில் கூட தேராத குப்பைகளை தூக்கிச்சுமந்த அதிமுகவினருக்கு இனிமேலாவது சுயமரியாதை உணர்ச்சி வருமா?என்ற கேள்வியை எழுப்பி இருந்தார் மே-17 இயக்கத்தின்  தலைவர் திருமுருகன் காந்தி கேட்டிருந்தார்.

இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிடி தினகரனும், நயினார் நாகேந்திரன் பேசிய வார்த்தை தவறு. ஆனால் அவர் பேசியது தவறு அல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அமமுகவின் மண்டல நிர்வாகிகளுடன் இன்று ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது,  சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை என நயினார் நாகேந்திரன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு,   ‘’ அதிமுக குறித்து நயினார் நாகேந்திரன் சொன்ன வார்த்தை தவறு.    தைரியம் இல்லை என்று சொல்லியிருக்கலாம்.  நயினார் நாகேந்திரன் சொன்ன வார்த்தைகள் சரியில்லை.   ஆனால், அதிமுகவிற்கு தைரியம் இல்லை என்பது உண்மைதான்’’ என்று அவர் அழுத்தமாகச் சொன்னார்.

எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக சரியாக சட்டமன்றத்தில் குரல் கொடுக்கவிலை என்று பாஜக குற்றம்சாட்டியிருக்கும் நிலையில் அமமுகவும் அந்த குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது.