×

"அன்வர் ராஜா நீக்கம் சரியே; மற்றவர்கள் திருந்துவார்கள்” - ஜெயக்குமார் தடாலடி!

 

அதிமுகவுக்குள் சசி... என தொடங்கினாலே மறுபேச்சுக்கு இடமில்லாமல் அந்த நிர்வாகியை தூக்கி எறிகின்றனர் ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸூம். அதற்கு கட்சியின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவும் விதிவிலக்கல்ல. ஜெயலலிதா மரணத்தின்போதே சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்தவர். அவர் சிறை சென்றதும் எடப்பாடியுடன் இணைந்தார். ஆனால் சசிகலாவுக்கே அவரின் விஸ்வாசம். அதேபோல பல தேர்தல்களில் அதிமுக தோற்றது பாஜகவுடனான கூட்டணி தான் பகீரங்கமாகவே கூறினார்.

இதையெல்லாம் எடப்பாடி தரப்பு ரசிக்கவில்லை. அவருக்கு நீண்ட நாட்களாவே கட்டம் கட்டி வந்தார் எடப்பாடி. அதற்கு தகுந்த காரணமாக அன்வர் ராஜா கொடுத்த நேர்காணல் அமைய உடனடியாக வெளியேற்றிவிட்டார். அவர் சசிகலா ஆதரவாளர் என்பதால் ஓபிஎஸ்ஸும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஓபிஎஸ் சொன்னாலும் எடுபட போவதில்லை என்பது தனி டாபிக். இவரின் நீக்கம் அதிமுகவிற்குள் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. ஆனால் நடவடிக்கை சரியே என முக்கிய நிர்வாகி ஜெயக்குமார் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"அன்வர் ராஜாவை நீக்கியது சரி தான். அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கழகம் என்பது ஒரு மாபெரும் இயக்கம். ராணுவ கட்டுப்பாட்டோடு இருக்கின்ற ஒரு இயக்கம். எனவே கழகத்திலிருந்து கொண்டு கழகத்தை விமர்சனம் செய்வது, கழக கூட்டங்களிலே அதாவது அறைக்கு உள்ளே நடக்கும் விஷயங்களை எல்லாம் தெரிவிப்பது நல்லதல்ல. எனவே அன்வர்ராஜா மீது எடுத்த நடவடிக்கை என்பது ஒரு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை. இல்லையென்றால் ஆள் ஆளுக்கு விமர்சனம் செய்வார்கள்” என்றார்.