×

மாரிதாஸ் சிறையில் இருக்கும்போதே அடுத்தடுத்து பாய்ந்த வழக்குகள்... டிச.27 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

 

தேசியவாதி என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மாரிதாஸ் என்பவர் யூடியூப்பில் பாஜக மற்றும் அதன் கூட்டணியில் இல்லாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்து வீடியோக்கள் வெளியிடுவார். மேலும் ட்விட்டர், பேஸ்புக் என சமூக வலைதளங்களிலும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் பதிவிடுவார். இதுபோன்று விஷமத்தனமான கட்டுக்கதைகளையும் வதந்திகளையும் பரப்பும் இவரை குண்டாஸில் கைது செய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. 

இச்சூழலில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணத்தையொட்டி தமிழ்நாட்டையும் காஷ்மீரையும் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்தக் கருத்து இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாகக் கூறி அளித்த புகாரின் அடிப்படையில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தேனி கிளைச்சிறையில் அவர் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோதே தனியார் தொலைக்காட்சி தொடர்பான மற்றொரு வழக்கிலும் கைது செய்யப்பட்டார். அதேபோல பெரியார், மணியம்மை குறித்து அவதூறு பரப்பியவதற்காக மேலும் ஒரு வழக்கு அவர் மீது பாய்ந்தது. ஏற்கெனவே ட்விட்டர் கருத்து வழக்கில் டிசம்பர் 23ஆம் தேதி அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இச்சூழலில் இன்று தொலைக்காட்சி வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் டிச.27 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.