×

"கயவர்கள் உற்சாகம்; அமளிக்காடாக்க காவிகள் முயற்சி" - கொந்தளித்த கி.வீரமணி!

 

கோவை வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்தும், சிலையின் மீது காவிப்பொடியை தூவி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த படிப்பக நிர்வாகிகள், இதுகுறித்து உடனடியாக போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் திராவிடர் கழகத்தினர் 10-க்கும் மேற்பட்டோர் சிலை முன்பாக திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இச்சூழலில் திக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படும் கயமைத்தனம் திட்டமிட்ட வகையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகள் - தண்டனைகள் என்பது மிகவும் மெத்தனமாகவே நடப்பது என்பது - கயவர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்து வருகிறது. கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படும் குற்றவாளிகள் மனநோயாளிகள் என்று சொல்லி, இத்தகைய வழக்கின் கோப்புகள் முடித்து வைக்கப்படும் போக்கு - காவல்துறையின் நடைமுறையாகவும் ஆகிவிட்டது.

தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள் என்றும், இந்த அரசு பெரியார் கொள்கை வழி செயல்படும் அரசு என்றும், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின், அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதும், சமூகநீதியில் நமது முதலமைச்சர் தொடர்ந்து செய்துவரும் சாதனைகள் இந்தியா முழுவதும் பாராட்டப்படுவதுமான ஒரு காலகட்டத்தில், தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படுவதை இணைத்துப் பார்க்கவேண்டும். முதலமைச்சர் முக்கியமாக இதில் கவனம் செலுத்தி, காவல்துறையை (காவல்துறை முதலமைச்சரின் துறை) முடுக்கிவிட வேண்டும்.

குற்றவாளிகள் - அதன் பின்னணியில் இருப்பவர்கள் மீதான நடவடிக்கை - தண்டனையை சரியான வகையில் எடுத்து விரைவுப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்ற நிலை உருவாகும்போதுதான் - இதற்கொரு முடிவு எட்டப்பட முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டை அமளிக்காடாக ஆக்கவேண்டும் என்று காவிகள் - காலிகள் முயற்சிக்கிறார்கள் என்பதையும் அரசு கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சினையை அணுகவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.