”சசிகலா ஜெயலலிதாவை துன்புறுத்தி கொன்றதாக கூறியவர் ஓபிஎஸ்” அதிமுக எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தொழிலாளர்களின் மே தின விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் பேசிய வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் தொழிலாளர்களின் நலனில் அதிமுக அரசு அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது என்று பேசினார். அதனை தொடர்ந்து பேசிய கலசப்பாக்கம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், “அதிமுகவுக்கு துரோகம் விளைவித்தவர் ஓ பன்னீர்செல்வம், தற்போது தன்னிச்சையாக செயல்பட்டு சசிகலாவின் ஆதரவோடு வலம் வருவது அதிமுகவினரின் மனதை நெருக்கடிக்கும் வகையில் இருக்கிறது. மேலும் தற்போதுள்ள அதிமுக கழக பொதுச் செயலாளரை பார்த்து முதல்வர் பதவி யாரால் வந்தது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
யாருடைய தயவும் இன்றி கட்சித் தொண்டர்களின் ஏகோபித்த குரலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. பன்னீர்செல்வம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு சசிகலா மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தான் காரணம் என்று கூறினார். மேலும் ஜெயலலிதாவை துன்புறுத்தி கொன்றதாக தெரிவித்திருந்தார். தற்போது கொலை குற்றவாளியாக வலம் வரும் சசிகலாவுடன் கூட்டு சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பயணிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஒரு ஓ.பன்னீர்செல்வம் மட்டும் அல்ல, ஓர் ஆயிரம் பன்னீர்செல்வம் வந்தாலும் அதிமுக கட்சியை வீழ்த்த முடியாது. அப்படி ஒருபோதும் கனவு காண வேண்டாம்” எனக் கூறினார்.