பெண்களின் உரிமையை ஆண்கள் நிர்ணயிக்கிறார்கள்.. பெண்கள் ஊமையாக்கப் படுகிறார்கள்.. கனிமொழி எம்.பி., கண்டனம்..
பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் ஒரே ஒரு பெண் மட்டுமே இடம்பெற்றதாக திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெண் பிள்ளைகளுக்கு 18 வயதிற்கு மேல் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் இருந்து வருகிறது. அவ்வாறு சிறு வயதிலேயே திருமணம் செய்வதால் அவர்களது உடல் நலன் வெகுவாக பாதிக்கப்படுகிறது. முதல் பிரசவத்தின் போது இறக்கும் பெண்களின் விகிதமும் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது வரம்பை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்தன.
இதுகுறித்து கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, மக்களை ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து காக்க பெண்களுக்கு சரியான வயதில் திருமணம் செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார். பெண்களின் திருமண வயதை 18 என்பதிலிருந்து 21 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி சமீபத்தில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக , திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து, மசோதா குறித்து ஆய்வு செய்ய ஜெயா ஜேட்லி தலைமையிலான நிதி ஆயோக் சிறப்புக் குழுவையும் கடந்த ஆண்டு அமைத்தது. 31 பேர் கொண்ட இந்த குழுவில் ஒரே ஒரு பெண் எம்.பி., மட்டுமே இடம்பெற்றிருந்தார். பெண்களின் வாழ்க்கை குறித்து ஆய்வு செய்யும் குழுவில் கூட ஒரே ஒரு பெண் மட்டுமே இருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் திமுக எம்.பி., கனிமொழியும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ மொத்தம் 110 பெண் எம்.பிக்கள் இருக்கிறார்கள்.. ஆனால் நாட்டில் உள்ள ஒவ்வொரு இளம் பெண்களையும் பாதிக்கும் மசோதா குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 30 ஆண்கள் ஒரே ஒரு பெண்னை தேர்ந்தெடுத்திருக்கிறது. பெண்களுக்கான உரிமைகளை தொடர்ந்து ஆண்களே நிர்ணயிக்கிறார்கள்.. பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகிறார்கள்..” என்று குறிப்பிட்டுள்ளார்.