×

ஐடி ரெய்டு- தலைமறைவான அரசியல் புள்ளிகள்?

 

கரூர் மாவட்டத்தை வருமான வரித்துறையின் "கமலா ஆப்ரேஷன்" என்ற கருமேகம் சூழ்ந்துள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த, 26-ம் தேதி முதல் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. முதல்நாள் சோதனைக்கு சென்று வீட்டு வாசலிலேயே தடுத்து தாக்கி அனுப்பப்பட்ட, அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில், இன்று சோதனை முழுவீச்சில் நடைபெற்றது. 

இந்நிலையில், அசோக் குமார், அமைச்சரின் நெருங்கிய நண்பரும், அரசு ஒப்பந்தக்காருமான சங்கர் ஆனந்த், கொங்கு மெஸ் மணி என்கின்ற சுப்பிரமணி, பாலவிநாயகா புளூ மெட்டல் உரிமையாளர் தங்கராஜ், மளிகைக் கடை தங்கராஜ், காளிப்பாளையம் பெரியசாமி உள்ளிட்டோர் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. இவர்களில் அமைச்சரின் தம்பி அசோக்குமார் மற்றும் சங்கர் ஆனந்த் ஆகியோர் மலேசியா அல்லது சிங்கப்பூரில் குடும்பத்துடன் முகாமிட்டிருப்பதாக கூறப்படுகிறது

சங்கர் ஆனந்தின் அலுவலகத்தில் மேலாளராக பணிபுரியும் ஷோபனா- பிரேம் குமார் வீட்டில், 26ம் தேதி மாலை துவங்கிய சோதனை, 6 நாட்களுக்கு பிறகு நேற்றிரவு நிறைவடைந்தது. இதையடுத்து, நேற்றிரவு 10 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு கணவன், மகனுடன் கிளம்பிய ஷோபனா மீண்டும் வீடு திரும்பவில்லை. ஷோபனாவும் அவரது குடும்பத்தினருடன் தலைமறைவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதேபோல் வருமான வரித்துறை சோதனை காரணமாக 26ஆம் தேதி மற்றும் 29 ஆம் தேதி என ஒத்திவைக்கப்பட்ட  மாமன்ற கூட்டம் நாளை (2ம் தேதி) நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, நாளையும் மாமன்றக் கூட்டம் நடக்காது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. 'நிர்வாக காரணங்களால் மாமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு' என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், 'மேயரும், துணை மேயரும் தலைமறைவானதால் தான் கூட்டம் ரத்தாகி இருப்பதாக திமுக கவுன்சிலர்கள் கிசுகிசுகின்றனர். கடந்த, 26ம் தேதி நடந்த வருமான வரித்துறை பெண் அதிகாரி காயத்ரி தேவி உள்ளிட்டோர் மீது தாக்குதலில் ஈடுபட்டதால்,  கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மற்றும் வீட்டுக்கு வந்த அதிகாரிகளை தாக்கியதாக துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.