×

தமிழக அரசின்  ஊர்தி.. தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள்.. முடிவெடுப்பது மத்திய அரசா??..  - கே.எஸ்.அழகிரி கண்டனம்...

 

தமிழக அலங்கார ஊர்தியில் யார் படம் இடம்பெற வேண்டும் என்பதை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, மத்திய அரசின் நிபுணர் குழு அல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கிற உரிமை பறிக்கப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தற்போது நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிற வகையில் அலங்கார ஊர்திகள் அமைக்க வேண்டுமென்று மத்திய அரசின் பாதுகாப்புத்துறை மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டது.

அந்த அடிப்படையில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்திலிருந்து பெரும் பங்காற்றிய கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., தமது கவிதைகளால் விடுதலை வேட்கையை உணர்த்திய தேசிய கவி பாரதியார், கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து வீரமிக்க போரை நடத்திய வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரின் சித்திரங்களை உள்ளடக்கிய அலங்கார ஊர்திகள் பங்கேற்பதை மத்திய அரசின் நிபுணர் குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தின் சார்பாக விடுதலைப் போராட்டத்தில் வீரமிக்க அளவில் பங்காற்றியவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்க மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது ? விடுதலைப் போராட்டத்தில் பெரும்பங்காற்றியவர் யார் என்பதை தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, மத்திய அரசின் சார்பான நிபுணர் குழு முடிவு செய்ய முடியாது. மத்தியில் மோடி ஆட்சி அமைந்தவுடன் ஒற்றை ஆட்சி மூலம், ஒற்றைக் கலாச்சாரத்தை மாநிலங்கள் மீது திணிக்கிற போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆதரவாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கின்ற வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய போக்குகள் மூலம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஜனநாயக முறையில் கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.