×

 ஸ்டாலினை எரிப்போம்.. திமுக வெளியிட்ட நாதக வீடியோ

 

நினைத்தால் ஸ்டாலினையே எரிப்போம் என்று நாம் தமிழர் கட்சி தொண்டர் ஆவேசமாக பேசும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி .  அந்த வீடியோவை வெளியிட்ட ராஜீவ் காந்தி,  ‘’போதுமா சீமான்? ’’என்று கேட்டு,  ‘’சீமான் பேசுவது அரசியல் அல்ல’’என்கிறார்.

அந்த வீடியோவில் பேசும் நாதக தொண்டர்,  ‘’அண்ணன் சீமான் அவர்கள் வரலாற்றில் உள்ள ஒரு செய்தியை சொன்னதுக்கு,  அதற்கு அவர் மேல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்கிறார்கள். ஒண்ணு மட்டும் நெனச்சுக்குங்க.. திராவிட அலுப்பத்தனமானவங்க எல்லாரும் சிந்தித்து பார்க்கணும்.. நெனைச்சா ஸ்டாலினையே எரிப்போம்’’என்று ஆவேசமாகிறார்.

 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 13ம் தேதி அன்று ரோடு கிழக்குத் தொகுதி திருநகர் காலனி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது அருந்ததியினர் மக்கள் தூய்மை பணி செய்ய வந்தவர்கள், வந்தேறிகள் என்று இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  சீமான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் பேச்சை கண்டித்தும் ஈரோடு கிழக்கு தொகுதி மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அருந்ததியர் சமுதாய மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சீமான் உருவபொம்மை எரித்து வருகின்றனர்.

அருந்ததியர் மக்கள் மற்றும் சமூக நீதி மக்கள் சார்பில் சீமான் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் அக்கட்சியின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு புகார் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வீரப்பசத்திரத்தில் வேட்பாளர் மேனகாவுடன் சீமான்  பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது திமுக -நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் 6 பேர் காயமடைந்தனர். சிலருக்கு மண்டை உடைந்ததாக தெரிகிறது. 

இந்த மோதலுக்கு பின்னர் டுவிட்டர் தளத்தில் #நாதகவிடம்_பயந்த_திமுக என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

சீமான் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டு வரும் நிலையில்,  நாங்க நினைத்தால் ஸ்டாலினையே எரிப்போம் என்று நாதக தொண்டர் ஆவேசமாகிறார்.  இதை கண்டித்திருக்கிறார் திமுக மாணவரணி தலைவர்.