×

இடஒதுக்கீடு விவகாரம்.. பஞ்சாயத்து தேர்தல் நடத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை வாபஸ்... மத்திய பிரதேச அரசு 
 

 

மத்திய பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அம்மாநில அரசு வாபஸ் பெற்றுள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு அண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசாணை பிறப்பித்தது. இதனையடுத்து அம்மாநிலத்தில் ஜனவரி 6, 28 மற்றும் பிப்ரவரி 16 ஆகிய  தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி (பஞ்சாயத்து) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி விட்டது.

இந்த சூழ்நிலையில், மத்திய பிரதேச சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரின்போது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) இடஒதுக்கீடு இல்லாமல் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படாது என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று, பஞ்சாயத்து தேர்தலை நடத்துவதற்காக சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மத்திய பிரதேச அமைச்சரவை திரும்ப பெற்றுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியதாவது:

முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பஞ்சாயத்து தேர்தலை நடத்துவற்கான அரசாணையை திரும்ப பெறுவதற்கான முன்மொழிவை இன்று (நேற்று) பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா முன்வைத்தார். இந்த முன்மொழிவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தற்போது மாநில அமைச்சரவையின் முடிவு தொடர்பான முன்மொழிவு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.