நான் பா.ஜ.க.வினருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்... மம்தா பானர்ஜி
அக்னி வீரர்களுக்கு வேலை வழங்குமாறு மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்தது, நான் பா.ஜ.க.வினருக்கு வேலை கொடுக்க வேண்டும் என அவர்கள் (மத்திய பா.ஜ.க. அரசு) விரும்புகிறார்கள் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மத்திய அரசு அண்மையில் ராணுவம், கடற்படை, விமானப்படையில் இளைஞர்கள் சேர ஏதுவாக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரையிலான இருபாலரும், 4 ஆண்டுகள் வரை முப்படைகளில் பணிபுரியலாம். அதன்பிறகு சேவா நிதி எனப்படும் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு, அவர்கள்: பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் தற்போது அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேர லட்சக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், எனக்கு ஒரு கடிதம் (மத்திய அரசிடம் இருந்து) வந்தது. அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அக்னிவீரர்களுக்கு வேலை வழங்குமாறு மாநில அரசை வலியுறுத்தினர். நான் பா.ஜ.க.வினருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாங்கள் ஏன்?, மாநில இளைஞர்களுக்கு (வேலை வாய்ப்புகளில்) முதல் முன்னுரிமை என தெரிவித்தார்.