×

இந்தியா அமெரிக்கர்களின் அடிமைகளை போல நடந்து கொள்கிறது.. மணி சங்கர் அய்யர் சர்ச்சை பேச்சு
 

 

இந்தியா (மத்திய அரசு) அமெரிக்கர்களின் அடிமைகளை போல நடந்து கொள்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் அய்யர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணி சங்கர் அய்யர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடந்த இந்திய-ரஷ்யா நட்புறவு சொசைட்டி நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மணி சங்கர் அய்யர் பேசுகையில் கூறியதாவது:  கடந்த 7 ஆண்டுகளில் அணிசேரா, அமைதி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை நாம் காண்கிறோம். நாம் அமெரிக்கர்களின் அடிமைகளை போல நடந்து கொள்கிறோம், சீனாவிடமிருந்து பாதுகாப்புக்காக  கெஞ்சுகிறோம். 

2014ம் ஆண்டுக்கு பிறகு ரஷ்யாவுடனான நமது உறவு பெரிய அடியை சந்தித்தது. தற்போதைய ஆட்சியில் எந்த கொள்கை முடிவு எடுத்தாலும் அதற்கு காங்கிரஸ் ஆதரவாக இல்லை.  ரஷ்யாவுடனான உறவை மத்திய அரசு சரி செய்ய வேண்டும். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ரஷ்யா (முன்னாள் யு.எஸ்.எஸ்.ஆர்.) இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்தது. உண்மையில் இந்திரா என்பது ரஷ்யாவின் பெயராக மாறியது. குறிப்பாக உஸ்பெகிஸ்தானில் பல சிறுமிகளுக்கு இந்திரா காந்தியின் பெயரிடப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பர் 6ம் தேதியன்று நம் நாட்டுக்கு வருகை தர உள்ளார். இந்த சூழ்நிலையில், இந்தியா அமெரிக்காவின் அடிமையாக உள்ளது, இந்தியா-ரஷ்யா இடையிலான உறவு மோசமாக உள்ளது என்று மணி சங்கர் அய்யர் கருத்து தெரிவித்து இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. உத்தர பிரதேசம் அமேதியில் ரூ.5 ஆயிரம் கோடியில், 7.5 லட்சம் ஏ.கே.-203 துப்பாக்கிகளை ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்க ஒப்பந்தத்துக்கு அண்மையில் பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.