×

"வெளில விடுற ஐடியாவே இல்ல" - மாரிதாஸுக்கு அடுத்த கெட்ச் போட்ட அரசு!

 

பிரபல யூடியூபரான மாரிதாஸ் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பாஜக மற்றும் அதன் கூட்டணியில் இல்லாத கட்சிகளை விமர்சித்து வீடியோ வெளியிடுவார். ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பார். அந்த வகையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தையொட்டி ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்து சர்ச்சையானது. அதில், "திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா. தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கிறது.

ஆகவே இங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எதிர்ப்புகள் எழுந்ததும் உடனடியாக அந்தப் பதிவை அவர் நீக்கினார். ஆனால் மதுரை புதூர் காவல்நிலைய போலீசார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் நேற்று முன்தினம் மாரிதாஸ் மீதால் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது. ஆனாலும் அவர் டிசம்பர் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலிலேயே இருப்பார். நியூஸ் 18 சானல் போலி மின்னஞ்சல் குறித்த அந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

இச்சூழலில் மேலும் ஒரு வழக்கு அவர் மீது பாய்ந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ ஒன்றில், இந்தியாவில் தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் கொரோனாவை பரப்பினார்கள் என பேசியிருந்தார். இந்த பேச்சு, இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டுகிறது; சமூகங்களுக்கிடையே மோதல் ஏற்படுத்துகிறது என நெல்லை மாவட்ட தமமுக தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் போலீசில் புகார் கொடுத்திருந்தார். தற்போது அந்த வழக்கு தூசி தட்டப்பட்டு, நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை டிசம்பர் 30ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.