×

அமைச்சர் பிடிஆரை பதவியில் இருந்து நீக்க கூடாது -எச்.ராஜா

 

ஆடியோ விவகாரத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கூடாது என்று  அறிவுறுத்தி இருக்கிறார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா.

 தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டெல்லியில் உள்ள பத்திரிக்கையாளர் ஒருவருடன் பேசியதாக இரண்டு ஆடியோக்களை வெளியிட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.   அந்த ஆடியோவில் முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் திமுகவை இயக்குகிறார்கள் என்றும்,  ஒரே ஆண்டில் இவர்கள் 30 ஆயிரம் கோடி ரூபாய் குவித்துள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

 ஆனால் அந்த ஆடியோவில் உள்ள குரல் தன் குரல் அல்ல என்று மறுத்திருக்கிறார் . அவரின் குரல் இல்லை என்றால் குரல் மாதிரி பரிசோதனைக்கு ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே? வழக்கு தொடுக்க வேண்டியது தானே? போலீசில் புகார் கொடுக்க வேண்டியதுதானே? என்று சரமாரி தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருகிறார் அண்ணாமலை.

 இந்த நிலையில் பழனியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, செய்தியாளர்களை  சந்தித்தார்.   அப்போது பிடிஆர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது ,  ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்த சர்ச்சை எழுந்த போது திமுகவுக்கும் அந்த நிறுவனத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னார்கள்.  ஆனால் தற்பொழுது வருமான வரித்துறை சோதனை நடக்கிறது.  எத்தனை வருமான வரி சோதனைகள் நடந்தாலும் எங்களை மிரட்ட முடியாது என்று இப்போது உதயநிதி சொல்லுகிறார்.   இதனால் அதில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது என்பது தெரிய வருகிறது என்கிறார். 

மேலும்,   நிதி அமைச்சர் பிடிஆர்  பழனிவேல் தியாகராஜன் தனது ஆடியோவில்,  முதல்வர் ஸ்டாலின் மகன்,  மருமகன் இருவரும் ஒரே ஆண்டில் முப்பதாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தது பற்றி கூறியிருக்கிறார்.  இதனால் அவரை அமைச்சர் பதவியில் துறை மாற்றினாலோ,  அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலோ இவர்கள் சம்பாதித்தது உண்மை என்பது உறுதியாகும். அப்படி செய்யக்கூடாது என்று வலியுறுத்தி இருக்கிறார்.