×

அதிமுக தலைமையில் தான் கூட்டணி; நம்பி வந்தால் கைத் தூக்கி விடுவோம்- செல்லூர் ராஜூ

 

அதிமுக எக்ஸ்பிரஸ் டெல்லி புறப்பட்டுவிட்டது, எக்ஸ்பிரசில் ஏறுபவர்கள் ஏறலாம். ஏறுபவர்கள் டெல்லி போகலாம். ஏறாதவர்கள் இங்கேயே இருக்கலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்குத் தொகுதிக்குட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் நிலையூர் கால்வாய் குறுக்கே பழுதடைந்து பாலத்தை 45.50 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பித்தும், 7 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்த கட்டிடத்தையும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். தொடர்ந்து தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் அருகே 17.39 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது மனைவி ஜெயந்தியுடன் பார்வையிட்டார். அதிகாரிகளிடம் நீர்த்திறப்பு குறித்து கேட்டறிந்தார்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் ஆய்வுக்கு உட்பட்டது. அரசு மேல்முறையிடு செய்துள்ளது. எதிர்காலத்தில் தான் தெரியும். அதிமுக எக்ஸ்பிரஸ் டெல்லி புறப்பட்டுவிட்டது. எக்ஸ்பிரசில் ஏறுபவர்கள் ஏறலாம். ஏறுபவர்கள் டெல்லி போகலாம். ஏறாதவர்கள் இங்கேயே இருக்கலாம். அதிமுக தலைமையில் தான் கூட்டணி. கூட்டணிக்கு நம்பி வந்தால் ஏற்றிக்கொள்வோம். அதிமுக தான் என்றுமே தலைமை. இது இன்றல்ல நேற்றல்ல, இது தான் வரலாறாக உள்ளது. எங்களை நம்பி வந்தால் கை தூக்கி விடுவோம். 
 
தமிழகம் திராவிட பூமி, தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி அமைக்க முடியும். எங்களை நம்பி வந்தால் நாங்கள் தூக்கி விடுவோம் தூக்கி விடுவோம். அவர்கள் உயர்வுக்கு காரணமாக இருப்போம். 2019 நடந்ததை நினைத்து கொண்டிருக்கக்கூடாது. காலங்கள் மாறுகிறது. அதிமுக தொண்டர்கள் ஒன்றாகத்தான் உள்ளோம். அதிமுகவில் நடப்பது வழக்கமான ஒன்று. அதிமுகவில் பிரிவார்கள். சிதறுவார்கள் தேர்தல் நேரத்தில் ஒன்றாக சேருவார்கள். கட்சி சிதறுவது அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும் இருந்தது. தற்போது எடப்பாடி காலத்திலும் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை நாங்கள் நம்புகிறோம், அவர் மிகச்சிறந்த அரசியல் தலைவராக இருக்கிறார். அவர் கேப்டனாக இருந்து அதிமுகவை சிறப்பாக வழி நடத்துவார்” எனக் கூறினார்.