×

பிரதமர் வேட்பாளராகிறார் மு.க.ஸ்டாலின்? ஜூன் 1-ம் தேதி கூட்டணி கட்சிகள் ஆலோசனை

 

543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வருகிற  ஜூன் 1-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினம் 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்தது.

ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. அன்றைய தினம் மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரியவரும். மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 272 இடங்களில் வெற்றி பெரும் கட்சி ஆட்சி அமைக்கும். 2 முறை பிரதமர் பதவியை அலங்கரித்த மோடி, மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டிவருகிறார். அதே சமயம் இந்தியா கூட்டணி, மோடியை வீழ்த்த தீவிரமாக பிரச்சாரம் செய்துவருகின்றனர். 

தேர்தல் முடிவுக்கான தேதி நெருங்கிவரும் சூழலில், இந்தியா கூட்டணி கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இதுவரை முடிவாகவில்லை. இந்தசூழலில் ஜூன் 1 ஆம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ் வாதி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா, ராஷ்டீரிய லோக் தளம் உள்ளிட்ட 28 கட்சிகள் உள்ளன. மேற்கண்ட கட்சி தலைவர்களுக்கு 1- ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு செய்யப்படவுள்ளது. இதற்காக ஜூன் 1 ஆம் தேதி தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் செல்லவுள்ளார். கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேக்கு வயதாகிவிட்டதால் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுகிறார். ராகுல்காந்தியும் தனக்கு பிரதமராக ஆசையில்லை எனக் கூறிவிட்டார். இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி கட்சிகள் முடிவுக்கு கட்டுப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் மம்தாவும் பிரதமர் வேட்பாளர் பந்தயத்தில் இருந்து விலகுகிறார். ஆகவே கூட்டணி கட்சிகளின் அடுத்த முக்கிய தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பேச வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 28 ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டார். இதிலிருந்து மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.