×

கோவாவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காதற்கு இதுதாங்க காரணம்.. காங்கிரஸ்

 

கோவாவில் காங்கிரஸின் நிலைமை நன்றாக உள்ளதால், சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கவில்லை என்று நானா படோல் தெரவித்தார்.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்வரும் கோவா சட்டப்பேரவை தேர்தலில் சிவ சேனாவும், தேசியவாத காங்கிரஸூம் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்தார். காங்கிரஸ் கூட்டணியில் சேராதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இதனையடுத்து, கோவாவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காதற்கான காரணத்தை மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் தற்போது தெரிவித்துள்ளார். இது  தொடர்பாக நானா படோல் கூறியதாவது: கூட்டணி குறித்து கட்சியின் உயர்மட்டக்குழு முடிவெடுக்கிறது. மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வை நிறுத்த சோனியா காந்தி அவர்களுக்கு (சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ்) உதவினார்.

மற்ற மாநிலங்களில் காங்கிரஸின் நிலைமை நன்றாக உள்ளது. எனவே அவர்களுடன் (சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ்) கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறுகையில், நாங்கள் கோவா தேர்தலில் காங்கிரஸூடன் இணைந்து போட்டியிட விரும்பினோம். ஆனால் சில உள்ளூர் தலைவர்களால் கூட்டணி அமைக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.