×

"பரிசோதனையை குறைத்து காட்டும் நாடகம்" - அரசை சந்தேகிக்கும் மாஜி முதல்வர்!

 

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோவில், "2017ஆம் ஆண்டு பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றபோது இஸ்ரேல் நாட்டில் இருந்து 2 மில்லியன் டாலருக்கு ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்திலேயே இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ என்ற உளவு நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் என்ற மென்பொருளையும் இந்தியா பெற்றது. அதற்கு ரூ.300 கோடி இந்திய அரசு அந்த நிறுவனத்துக்கு கொடுத்துள்ளது. இதுவும்அந்த ஒப்பந்தத்தில் இருக்கிறது என்று அமெரிக்க பத்திரக்கையில் தெள்ளத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இதிலிருந்து பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு சென்றபோது, பெகாசஸ் மென்பொருள் வாங்கப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. காங்கிஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இது சம்பந்தமான விசாரணையில் உடனடியாக முடிவெடுக்கப்பட வேண்டும்என்று கோரிக்கை வைத்துள்ளார். இஸ்ரேலிடம் மென்பொருள்வாங்கியதற்கு கையெழுத்திட்டதற்கான ஒப்பந்தம் மத்திய அரசிடம் இருக்கிறது. அதை மூடி மறைக்கின்ற வேலையை இப்போது மோடி அரசு பார்த்துக் கொண்டிக்கிறது.

ஆகவே விசாரணை எந்தவித பாரபட்சமும் இன்றி நடப்பதற்கு பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். வெளிப்படையான விசாரணைக்கு அவர் உத்தரவிட வேண்டும். பிரதமர் தன்னையும் அந்த விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றை குறைவாக காட்டுவதற்கு, பரிசோதனையை குறைத்து ஒரு நாடகத்தை புதுச்சேரி அரசும், மருத்துவத் துறையும் நடத்துகிறது. இறப்பு விகிதமும் அதிகமாக இருக்கிறது.

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான காரணம் என்ன? மின்துறை நஷ்டத்தில் இயங்கவில்லை. தனியார் மயமாக்கினால் மின்கட்டனம் உயரும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தடைபடும். குடிசைகளுக்கு மின்சாரம் கொடுக்க முடியாத சூழல் உருவாகும். நமது மாநிலத்தில் ரூ.25 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்டுள்ள மின்சார கட்டமைப்புகளை தனியாரிடம் மத்திய அரசு தாரைவார்த்துக் கொடுக்க தயாராகிவிட்டது. இதை காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்க்கிறோம். மதசார்பற்ற அணிகளோடு இணைந்து போராட்டம் நடத்துவோம்.

மின்துறை தனியார் மயமாக்கலை எங்கள் அரசு ஏற்றுக்கொள்ளாது என்று பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மின்துறை அமைச்சர்களுக்கு ரங்கசாமி கடிதம் அனுப்ப வேண் டும். புதுச்சேரி அரசு ரூ.4 கோடி செலவில் புதிதாக 11 நான்குசக்கர வாகனங்கள் வாங்கி ஊதாரித்தனம் செய்து மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர். இதனை பொது மக்கள் தட்டிக்கேட்க வேண்டும்” என பேசியுள்ளார்.