×

நம்பர் 1 முதல்வர் நாடகம்.. அண்ணாமலை காட்டம்

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரத்தைச் சேர்ந்தவர் பிபிஜி சங்கர்.   வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும்,  தமிழக பாஜகவில் எஸ்சி /எஸ்டி பிரிவின் மாநில பொருளாளராகவும் இருந்து வந்துள்ளார்.  இவர் நேற்று காலையில் சென்னைக்குச் சென்று விட்டு இரவு வீட்டிற்கு தன் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார்.

 அப்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை சிக்னல் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது மர்ம  கும்பல் காரை வழிமறித்து சரமரியாக காரின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி இருக்கிறது.  இதில் காரின் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்திருக்கிறது .

தன்னை கொலை செய்ய வந்துள்ளார்கள் என்பதை அறிந்து சங்கர் உயிர் பிழைக்க காரில் இருந்து இறங்கி சாலையில் ஓடி இருக்கிறார்.  அப்போதும் விடாத மர்ம கும்ப கும்பல் அவரை ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.  இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்து உள்ளார் சங்கர்.  கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  ‘’வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும்,  தமிழக பாஜகவின் பட்டியல் அணி மாநிலப் பொருளாளருமான பிபிஜி சங்கர், சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது தினம் தினம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது. 
பொதுமக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாற்றப்பட்டு இருக்கிறது. 

காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்

உடனடியாக, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்தும் என்றும் எச்சரிக்கிறேன்’’என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.