×

எனக்கு பதவி, பொறுப்பு தேவையில்லை; கட்சியில் தொண்டனாக இருப்பதே பெருமை- ஓபிஎஸ்

 

அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே நடைபெறும் உட்கட்சி பூசலால் நிர்வாகிகள் மாறி மாறி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் நாள்தோறும் தனித்தனியே சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வத்தை கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென சென்னை கிளம்பி  சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென இன்று பெரியகுளம் வந்தார். அப்போது திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் தலைமையில் ரெட்டியார் சத்திரம் ஒன்றிய செயலாளர் பசும்பொன், குள்ளிசெட்டிபட்டி பிரசிடெண்ட் வைகை பாலன், வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, நிலக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட வேடசந்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதி, நகர ஒன்றிய பதவிகளில் உள்ள முக்கிய அதிமுக நிர்வாகிகள்   200க்கும் மேற்பட்டோர் பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபன்னீர்செல்வம், “
எந்த நோக்கத்திற்காக அதிமுக என்ற ஒரு பெரும் கழகத்தை, கட்சியை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா துவக்கினார்களோ அந்த கழகத்தை அவர்கள் வழி காட்டிய வழியில் நன்றாக நடத்திச் செல்ல வேண்டும் என்பதற்காக மிகுந்த ஆர்வத்தோடு கழகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று நாம் அனைவரும் நினைக்கின்ற இந்த நேரத்தில் அசாதாரணமான சூழல் நிலவி வருகின்றது. இது ஏன் ஏற்பட்டது, எதனால் ஏற்பட்டது என்று நாம் அனைவருக்கும் தெரியும். அதிமுக கழகத்தை உருவாக்கிய எம். ஜி.ஆர். 10 ஆண்டு காலங்களும் அதன் பின்னர் ஜெயலலிதா 16 ஆண்டுகளும் என 26 ஆண்டுகள் நல்லாட்சி நடத்திய நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் சீர்கேடனது. எனவே தமிழகத்தில் 30 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி கொடுத்த ஒரே கட்சி அதிமுக தான். எனவே இந்த கட்சியில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை தான்

இதுவரையில்  அம்மா அவர்கள் எனக்கு பொறுப்பு கொடுத்து அந்த பொறுப்பை திருப்பி என்னிடமிருந்து பெற்றுக் கொண்டதாக சரித்திரமே கிடையாது. அந்த அளவிற்கு நான் அவர்களுக்கு விசுவாசமாக இருந்துள்ளேன்.  நான் முதலமைச்சராக வேண்டும் என்ற நிலையில் கூறவில்லை. எம்ஜிஆர் ஜெயலலிதா கட்டிக் காப்பாற்றி ஆரம்பித்து கொடுத்த இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்தி செல்ல வேண்டும் என்றே கூறுகிறேன்” என தெரிவித்தார்.