×

கொரோனா பரவல்  5% கீழ் செல்லும் வரையிலாவது டாஸ்மாக்கை மூட வேண்டும் - ஓபிஎஸ்..

 

கொரோனா மூன்றாவது அலையை ஓரளவுக்கு தடுக்க,  தமிழகத்தில் உள்ள  அனைத்து  மதுக்கடைகளையும் உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழகத்தில் கடந்த 27.12. 2021 அன்று 605 ஆக இருந்த கொரோனா தொற்று,  மூன்றாவது அலை வேகமாக பரவத் தொடங்கியதை அடுத்து 3.1. 2022 அன்று 1,728 ஆக அதிகரித்தது. இதன் விளைவாக இரவு நேர ஊரடங்கு,  ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்,  ஞாயிறு முழு ஊரடங்கு,  பள்ளிகளுக்கு விடுமுறை என பல புதிய கட்டுப்பாடுகள் 5.1. 2022 அன்று விதிக்கப்பட்டன.  ஆனால் டாஸ்மாக் கடைகள் பற்றி வாய் திறக்கவில்லை.

புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட அன்று 4, 862 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 10, 978 ஆக  அதிகரித்துள்ளது. மூன்றே நாட்களில் தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கு மேலாக  உயர்ந்திருக்கிறது.  இதற்கு காரணம் நாடு முழுவதும் மதுக்கடைகள் செயல்பட அரசு அனுமதிருப்பது தான்.  கடந்த ஆட்சி காலத்தில் கொரோனா பாதிப்பு இருந்தபோது தற்போதைய முதலமைச்சரும்,  அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் உட்பட திமுகவினர் வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் எத்தனை சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில் தான்  மதுக்கடைகளை திறக்க வேண்டுமே அன்றி,  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை  வைத்து மது கடைகளை திறக்கக் கூடாது என்று திமுக அப்போது வாதிட்டது.

 நேற்று தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின்படி சுமார் 8 %  பேர் தமிழகத்தில் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.  திமுகவின் வாதப்படி 8 சதவீத பாதிப்பு உள்ள நிலையில் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் தமிழக அரசு அனைத்து மதுக்கடைகளையும் திறந்து வைத்திருக்கிறது. கொரோனா   வேகமாக பரவிக் கொண்டிருக்கும் தருணத்தில் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 ஒரு பக்கம் பள்ளி கல்லூரிகளை மூடவும்,  வழிபாட்டு தளங்களை வாரத்தில் 3 நாட்கள் மூடவும் உத்தரவிட்டு விட்டு மறுபக்கம் மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது கொரோனாவைக்  கட்டுப்படுத்த உதவாது.  மாறாக அது அதிகரிக்கவே வழிவகுக்கும். பிப்ரவரி மாதத்தில்  கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொடும் என வல்லுனர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு, கொரோனா மூன்றாவது அறையை ஓரளவுக்காவது தடுக்கும் வகையில், வைரஸ் பரவல் 5% கீழ் செல்லும் வரையிலாவது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்”  என்று குறிப்பிட்டுள்ளார்.