×

அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் எல்லாம் இல்லை- பண்ருட்டி ராமச்சந்திரன்

 

அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருப்பதாக கூறுவதெல்லாம் கட்டுக்கதை , ஆதார் அட்டை மூலம் கணக்கெடுத்தால்தான் தொண்டர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியும் என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


சென்னை அசோக் நகரில் உள்ள அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனின் இல்லத்தில் வி.கே.சசிகலா பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து உடல் நலன் குறித்து விசாரித்தார். சசிகலா புறப்பட்டு சென்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், “அதிமுக  இரு தனித்தன்மை கொண்டது. ஒன்று ஏழைகளுக்கான கட்சி , இரண்டு யார் வேண்டுமானலும் இணையலாம் சம வாய்ப்பு வழங்கப்படும். அதன்மூலம்தான் ஹண்டே போன்றவர்கள் கட்சியில் உயர்ந்தனர்.ஒற்றைத் தலைமை ,  இரட்டை தலைமை என்பதெல்லாம் முக்கியமல்ல.  ஒற்றைத் தலைமை இருந்து என்ன சாதித்து விட்டார்கள்? கட்சியின் உருவ அமைப்பில் இன்று மாறுதல் ஏற்படலாம். எம்ஜிஆரே கட்சியில் 3 பிறவி எடுத்தார். பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக இடைக்காலம், கடைக்காலம் என்பதெல்லாம் தற்காலிகம்தான் .

எம்ஜிஆர் தனது காலத்தில் பொதுச்செயலாளராக இருந்தாரா..? இல்லை மக்கள் யாரை நம்புகிறார்கள் என்பதுதான் முக்கியம். பொழுது விடியும்போதுதான் நாடகத்தின் கிளைமாக்ஸ் தெரியவரும். இப்போதே கூற முடியாது. எல்லா பொதுக்குழு உறுப்பினர்களும் சேர்ந்து எம்ஜிஆரை கட்சியை விட்டு வெளியேற்றினர், அதனால் என்ன நடந்து விட்டது ? கட்சியில் இன்னும் பல குழப்பங்கள் ஏற்படும் ? அதன்பின்புதான் தீர்வு ஏற்படும் . அதிமுக விசயத்தில் பாஜக தலையிட வேண்டிய அவசியமில்லை. பாஜக தலையிடுவதாக வெளியாகும் தகவல்  தவறானது. எடப்படாடி பழனிசாமியால்  நியமிக்கப்பட்டவர்கள்தான் அவரை பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். 

தற்போது கட்சியில் உள்ள நிர்வாகிகள் முறைப்படி உறுப்பினர்களால் தேர்வானர்கள் இல்லை. சாணியில் பிள்ளையார் செய்து,  அந்த பிள்ளையாரை செய்தவர்களே அதை விழுந்து கும்படுவது போலதான் தற்போது பொதுச்செயலாளர் நியமனம் உள்ளது. கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை ஆற்றில் நுரை போல மேலாக தெரிகிறது. ஆனால் கீழ்மட்டத்தில் எடுக்கும் முடிவுதான் முக்கியம். மேல்மட்டத்தில் உள்ள பிரச்சனை காற்றில் நுரை பறப்பது்போல பறந்துவிடும். அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருப்பதாக கூறுவதெல்லாம் கட்டுக்கதை.  சும்மா வாயால் சொல்லுகின்றனர் .  ஆதார் அட்டை மூலம் கணக்கெடுத்தல்தான் உண்மையான தொண்டர்கள் எண்ணிக்கை தெரியவரும். கட்சியில் ஒன்றரை கோடி... 3 கோடி.. தொண்டர்கள் எல்லாம் கிடையாது. தற்போதைய சூழலில் தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள். எம்ஜிஆரின் உண்மை வாரிசு தொண்டர்கள்தான். மேல்மட்ட பிர்ச்சனை குறித்து தொண்டர்கள் கவலைப்பட  வேண்டாம், அவை தீர்ந்துவிடும்” எனக் கூறினார்.