"விவசாயிகள் எனக்காகவா செத்தார்கள்?; திமிராக பேசிய மோடி" - கவர்னர் பரபர குற்றச்சாட்டு!
கடந்தாண்டு அக்டோபரில் நடந்த பல்வேறு சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தோல்வி, அடுத்து வரும் உபி, பஞ்சாப் தேர்தல்கள் எதிரொலி காரணமாக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு வாபஸ் பெற்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதவை நிறைவேற்றி சட்டப்பூர்வமாக வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டன. ஆனால் ஒன்றரை ஆண்டு கால போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு என்ன பதில், இழப்பீடூ வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் கேள்வியெழுப்பினார்.
ஆனால் அப்படி யாரும் இறக்கவில்லை என வேளாண் அமைச்சர் தோமர் திட்டவட்டமாக மறுத்தார். பிரதமர் மோடியும் செவிசாய்க்கவில்லை. தற்போது இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அதனை கிளப்பியிருப்பதே பாஜகவின் முன்னாள் தேசிய துணை தலைவரும் இப்போதைய மேகலயா கவர்னருமான சத்ய பால் மாலிக் தான். ஹரியானா மாநிலம் தாத்ரியில் நேற்று அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், " நான் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். விவசாயிகள் இறப்பு குறித்து பேசினேன்.
அவரிடம் விவசாயிகள் போராட்டத்தில் 500 விவசாயிகள் இறந்துவிட்டனர் என்றேன். அதற்கு அவர் ஏதேச்சதிகார ஆணவத்துடன் "அவர்கள் எல்லோரும் எனக்காகவா இறந்தார்கள்?" என்று கேட்டார். நான் அவரிடம் "ஆமாம், நீங்கள் மன்னராக இருப்பதால் அவர்கள் இறந்தார்கள்" என்று கூறினேன். அவர் உடனே நீங்கள் அமித் ஷாவை போய் பாருங்கள் என்றார். நான் இப்படி பேசுவதால் எனக்கு பணியிட மாறுதல்கள் நடக்கும். இருந்தாலும் அதைப் பற்றி எந்தக் கவலையும் எனக்கில்லை. நான் எப்போதும் விவசாயிகள் பக்கம்தான் ” என்று கூறினார். தற்போது அவர் பேசிய வீடியோ வைரலாகி பிரதமர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்.