மேகதாது அணை விவகாரம்: மோடிக்கு ஏற்பட்ட நிலைதான் காங்கிரஸுக்கும்.. - எச்சரிக்கும் பி.ஆர்.பாண்டியன்..
கர்நாடகவில் மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தும் முழக்கத்தை காங்கிரஸ் கைவிடாவிட்டால், தமிழக வருகையின்போது மோடிக்கு ஏற்பட்ட நிலைதான் அக்கட்சி தலைவர்களுக்கும் ஏற்படும் என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்..
மேகதாதுவில் புதிய அணை கட்டக்கூடாது என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருவாரூரில் இருந்து மேகதாது அணை நோக்கி கண்டன பேரணியை தொடங்கியிருக்கிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டக்கோரி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்ட நடைபயணத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, புதிய அணை கட்ட வரைவு திட்ட அறிக்கைக்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தியும் இந்த கண்டன பேரணி நடைபெறுகிறது.
திருவாரூரில் தொடங்கிய பேரணியானது தஞ்சை, திருச்சி, நாமக்கல், சேல,, ஓசூர், வழியாக மேகதாதுவுக்குச் செல்கிறது. இந்த பேரணிக்கு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இன்று தஞ்சையை அடைந்த போராட்ட குழுவினருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்து காங்கிரஸுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன், மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸும் - பாஜகவும் கூட்டுச்சதியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேகதாதுவில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கைவிடாவிட்டால் ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் சோனியா ஆகியோர் தமிழகம் வந்தால் கடுமையாக எதிர்ப்போம் என்று தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் மோடி வருகையின்போது ஏற்படும் நிலைமைதான், இனி காங்கிரஸுக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியை இனி தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.. மேகதாதுவில் அணைகட்ட கர்நாடகவில் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து வருகிறது.. தமிழ்நாடு காங்கிரஸ் மௌனம் சாதிக்கிறது.. கர்நாடகாவில் காங்கிரஸின் செயல்பாடு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது.