ராமநாதபுரத்தில் போதிய ஆதரவு இல்லாததால் கோவை, குமரியில் பிரதமர் மோடி போட்டி?
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி தொகுதியில் களமிறங்கி போட்டியிட பிரதமர் மோடி முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் முதல்வராக இருந்த மோடி பிரதமர் வேட்பாளரானதும் 2014 இல் நடந்த மக்களவைத் தேர்தலில் வாரணாசி, வதோதரா இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் வாரணாசி தொகுதியை மட்டும் தக்க வைத்துக் கொண்டு வதோதரா தொகுதியை விடுவித்தார். இதன் பின்னர் 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் நின்று அமோக வெற்றி பெற்றார். தற்போது மூன்றாவது முறையாக மோடி சந்திக்கும் மக்களவைத் தேர்தல் அவருக்கு பெரும் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த முறை இரண்டு தொகுதியில் போட்டியிடலாம் என்று பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளாராம். ஒன்று வழக்கம் போல் வாரணாசி இன்னொன்று தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதி என தகவல் வெளியானது. ஆன்மீக தலமான ராமேஸ்வரம் இருப்பதால் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட மோடி முடிவு எடுத்திருந்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜகவுக்கு போதிய ஆதரவு இல்லை என்பதால், கன்னியாக்குமரி அல்லது கோவை மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடலாம் என பாஜக மேலிட தலைவர்கள் பிரதமரிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.