×

பா.ஜ.க.வில் இணையும் பிரியங்கா மவுரியா.. தர்மசங்கடத்தில் உ.பி. காங்கிரஸ்

 

காங்கிரஸின் நான் ஒரு பெண், என்னால் போராட முடியும் என்ற பிரச்சாரத்தின் முகமான பிரியங்கா மவுரியா பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார். இது காங்கிரஸூக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பெண் வாக்காளர்களை கவரும் நோக்கில், காங்கிரஸ் கட்சி நான் ஒரு பெண், என்னால் போராட முடியும் என்ற முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது. நான் ஒரு பெண், என்னால் போராட முடியும்  என்ற பிரச்சாரத்தின் முகமாக அறியப்படுவர் பிரியங்கா மவுரியா. இவர் தற்போது காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக பிரியங்கா மவுரியா பா.ஜ.க.வில் இணையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லக்னோவில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் பிரியங்கா மவுரியா  தென்படுகிறார். பிரியங்கா மவுரியா செய்த நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், நான் ஒரு பெண், என்னால் போராட முடியும் என்பது வெறும் கோஷமாகவே இருந்து வருகிறது. எனது தொகுதி மக்களுக்கு கடுமையாக உழைத்தேன். பெண்களின் வாக்குகளை கவருவதற்காக நாங்கள் பயன்படுத்தப்பட்டோம். ஆனால் உரிமை என்று வரும் போது ஓரங்கட்டப்பட்டோம். 

பா.ஜ.க.வுடன் விவாதித்து வருகிறேன். மிக விரைவில், நான் பா.ஜ.க.வுடன் இருப்பேன் என்பதை நீங்கள் காண்பீர்கள் என்று தெரிவித்தார். பிரியங்கா மவுரியா பா.ஜ.க.வில் சேரப்போவது காங்கிரஸூக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட் கூறுகையில், தங்களுக்கு டிக்கெட் மறுக்கப்படுவதால் சிலர் ஏமாற்றம் அடைந்திருக்கலாம். ஆனால் இது எங்கள் பிரச்சாரத்தில் ஒரு குறைபாடாக கருத முடியாது என்று தெரிவித்தார்.